சென்னையில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நிறைவு விழாவில், ஒட்டுமொத்தத் தொடரில் முதலிடம் பிடித்த மகாராஷ்ட்டிரா, இரண்டாம் இடம் பிடித்த தமிழ்நாடு, மூன்றாம் இடம் பிடித்த ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு ஒன்றிய அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் முன்னிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுக் கோப்பைகளை வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், “இந்திய ஒன்றியத்தின் விளையாட்டு துறையின் தலைநகர் என்ற நிலையை அடைவதற்கு தமிழ்நாட்டிற்கு அனைத்து தகுதிகளும் இருக்கிறது என்பதை மீண்டும் தமிழ்நாடு நிரூபித்திருக்கிறது” என்றார்.
“விளையாட்டுத்துறை வரலாற்றில் எத்தனையோ தேசிய அளவிலான போட்டிகள் நடைபெற்றிருந்தாலும், அதில் பங்கேற்றிருந்தாலும் பதக்கப் பட்டியலில் இந்த முறைதான் தமிழ்நாடு முதல் 3 இடங்களுக்குள் வந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
“கடந்த ஓராண்டுக்கும் மேலாக திராவிட மாடல் தமிழ்நாடு அரசு விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு எடுத்த நடவடிக்கைகள்தான் இதற்கு ஒரே காரணம்” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
“முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஏழை, எளிய கிராமப்புற விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பலரை அடையாளம் காண்பதற்கு வாய்ப்பாக அமைந்தது. அந்த திறமையாளர்களை கண்டறிந்து அவர்களுக்கான அந்த பயிற்சியை அரசு கொடுத்தது. அதன் விளைவாகத்தான் தமிழ்நாடு இன்று 2வது இடத்திற்கு வந்திருக்கிறது” என்று கூறினார்.
மணிப்பூர் வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அமைச்சர் உதயநிதி, அவர்களில் இரண்டு பேர் இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளனர் எனப் பெருமிதம் தெரிவித்தார்.
தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையால் பயன் பெற்ற தடகள வீரர்கள் இந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் எட்டு பதக்கங்களை வென்றுள்ளனர் என்றும் அதில் ஐந்து பதக்கங்கள் தங்கப்பதக்கங்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையால் பயன்பெற்ற தயானந்தா மற்றும் பூஜா ஸ்வேதா ஆகியோர் பதக்கங்கள் பெற்றதற்கு சிறப்பு வாழ்த்துக்களை அமைச்சர் தெரிவித்தார்.
இந்த விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் 37 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.