கேலோ இந்தியா போட்டியில் பங்கேற்க விருப்பமா? இதைப் படிங்க…
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்புகிறவர்களுக்கான தேர்வுப் போட்டி, நாளை மறுநாள் 14 ஆம் தேதியன்று திருநெல்வேலி, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு கோவிட் காரணமாக போட்டிகள் நடைபெறவில்லை. அதன்பிறகு 2021 ஆம் ஆண்டிற்கான போட்டிகள் ஹரியானா மாநிலம், பஞ்சகுலாவிலும், 2022 ஆம் ஆண்டிற்கான போட்டிகள் மத்திய பிரதேச மாநிலம் போபாலிலும் நடத்தப்பட்டன.
2023 ஆம் ஆண்டிற்கான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், வருகிற 19 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் நடத்தப்பட உள்ளன. இந்நிலையில், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போருக்கான தேர்வுப் போட்டிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இறகுப்பந்துப் போட்டியில் பங்கேற்க விரும்புவோருக்கான தேர்வுப் போட்டி, நாளை மறுநாள் 14 ஆம் தேதியன்று திருநெல்வேலி, அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. அதே போல் மல்யுத்தப் போட்டிக்கான தேர்வுப் போட்டியும் அதே 14 ஆம் தேதி திருச்சி, அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.
களரிபயட்டுப் போட்டிக்கான தேர்வுப் போட்டி கோயம்புத்தூர், நேரு விளையாட்டு அரங்கில் 14 ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர்
01.01.2005 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்திருக்க வேண்டும்.
கீழ்க்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் இரண்டு சான்றிதழ்கள் கண்டிப்பாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
1. ஆதார் அடையாள அட்டை (அல்லது) பாஸ்போர்ட்
2. பிறப்பு சான்றிதழ் (குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 01.01.2023 அன்றோ அல்லது அதற்கு முன் நகராட்சி/கிராம பஞ்சாயத்துக்கள் மூலம் வழங்கப்பட்டது)
3. பள்ளி சான்றிதழ்கள்
4. இருப்பிடச் சான்றிதழ்
இந்த அறிவிப்பை, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.