குலசேகரப்பட்டினம் இனி ‘சேட்டிலைட் பிசினஸ்’ சென்டர்… தமிழ்நாட்டிற்கு என்ன நன்மைகள் ?

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டியதைத் தொடர்ந்து, விரைவிலேயே சிறிய வகை ராக்கெட் ஏவுதலுக்கு ஏற்ற சேட்டிலைட் பிசினஸ் சென்டராக குலசேகரப்பட்டினம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாட் ஏவுதளத்தில் இருந்துதான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’, ராக்கெட் எனப்படும் செயற்கை கோள்களை ஏவிவருகிறது. ‘இஸ்ரோ’ மிகக்குறைந்த கட்டணத்திலேயே செயற்கை கோள்களை விண்ணில் ஏவிவருவதால், பல நாடுகளும் தங்களது செயற்கைக்கோளை ஏவ இஸ்ரோவை தேடி வருகின்றன. இதனால் இஸ்ரோ, பல்வேறு நாடுகளின் செயற்கை கோள்களையும் வணிக ரீதியில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்துகிறது.

ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டிய மோடி
அதிகரிக்கும் இந்த தேவைகள் காரணமாக இரண்டாவது ஏவுதளம் அமைக்க வேண்டியது அவசியமானதாகி விட்டது. இதற்கான இடத்தை தேர்வு செய்தபோது, நிலவியல் ரீதியாகவும், எரிபொருள் சிக்கனம் கருதியும் ஸ்ரீஹரிகோட்டாவைவிட சிறந்த இடமாக குலசேகரன்பட்டினம் கண்டறியப்பட்டது. இதனையடுத்தே, இங்கு நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை 2,233 ஏக்கரில், ரூ. 950 கோடி செலவில் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தமிழக அரசின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அமைய இருக்கும் குலசேகரன்பட்டின ஏவுதளத்திற்காக நிலம் கையகப்படுத்துதல், தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது போன்றவற்றில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டது.

இந்த நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடி, தூத்துக்குடி துறைமுகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, குலசேகரப்பட்டினத்தில் அமைக்க உள்ள ராக்கெட் ஏவுதளத்துக்கான அடிக்கல்லை நாட்டினார்.
இதனையடுத்து, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து வளிமண்டலத்தை ஆய்வு செய்ய, ரோகிணி 6 H 200 (Rohini sounding rocket) என்ற சிறிய ரக ராக்கெட், மதியம் 1.40 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
‘சேட்டிலைட் பிசினஸ்’ சென்டர்
தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம், இரண்டாண்டு காலத்துக்குள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிடும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். விண்வெளித் துறையில் 100 சதவீத அந்நிய முதலீடை ஒன்றிய அரசு தற்போது அனுமதித்துள்ள சூழ்நிலையையொட்டி இந்த அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், சிறிய செயற்கைக்கோள்களுக்கான உலகளாவிய சந்தை CAGR 16.4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2020 ல் 3,215.9 மில்லியன் டாலராக காணப்பட்ட இந்த சந்தையின் மதிப்பு, 2030 ல் 13,711.7 மில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சந்தையைப் பயன்படுத்தும் நோக்கிலேயே, தற்போது, குலசேகரப்பட்டினத்தில் புதிய விண்வெளி நிலையத்தை நிறுவத் தொடங்கியுள்ளது ஒன்றிய அரசு. இதனால், குலசேகரப்பட்டினம் ‘சேட்டிலைட் பிசினஸ்’ சென்டராக உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு, முதலீட்டு பயன்கள்
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவதன் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாவதோடு, பல்வேறு துறைகளில் முதலீடுகளும் ஈர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக, இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் கூறுகையில், “குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவதன் மூலம் அந்த பகுதியில் உதிரி பாகங்களை தயாரிக்கும் பல தொழில் நிறுவனங்கள் புதிதாக வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இதனால், அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும். இதனால், இந்த பகுதி பெரிய வளர்ச்சி அடையும்” என்றார்.

ஏவுதளத்தின் கட்டுமான பணியின் மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமானம், பொறியியல் மற்றும் தளவாடங்கள் போன்ற பல்வேறு துறைகளில் ஸ்கில்டு மற்றும் அன்ஸ்கில்டு தொழிலாளர்கள் இந்தத் திட்டத்திற்குத் தேவைப்படுவார்கள். கூடுதலாக, உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் துணைத் தொழில்களின் வளர்ச்சிக்கும் இது வழிவகுக்கும். இதனால் இந்திய அளவில் மட்டுமல்லாது மாநிலத்தின் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும்.