குறைவான இறப்பு விகிதம்: பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பில் தமிழகம் சாதனை!
பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, தமிழ்நாட்டில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 38 சதவீதம் குறைந்துள்ளது. தமிழகத்தின் இந்த சாதனைக்கு காரணம் என்ன என்பது குறித்து விரிவான அலசல் இங்கே…
தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த 2020-ஆம் ஆண்டு நிலவரப்படி குழந்தைகள் இறப்பு விகிதம் ஆயிரத்துக்கு 13 குழந்தைகள் என்ற நிலையில் இருந்தது. தற்போது, சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் ஆயிரம் குழந்தைகளுக்கு 8.2 என்ற அளவில் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இரண்டு ஆண்டுகளில் 38% குறைந்துள்ளது.
பச்சிளம் குழந்தைகளின் 28 நாட்கள்
‘பச்சிளம் குழந்தைகள்’ என்பவர்கள் 28 நாட்களுக்குள் இருக்கும் குழந்தைகள். கர்ப்ப காலத்தில் 37 வாரங்களுக்கு முன்பு பிறக்கும் குழந்தைகள் குறைப்பிரசவ குழந்தைகள். ஒரு குழந்தை பிழைத்து உயிர்வாழ்வதற்கான மிக முக்கியமான காலகட்டம் முதல் 28 நாட்களே. இந்த காலகட்டத்தில் குழந்தைகளில் அதிக இறப்புகள் நிகழ்கின்றன. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 50% இறப்புக்கள், பச்சிளம் குழந்தைகளாக இருக்கும்போதே நிகழ்கின்றன.
ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரையில் தொட்டில் குழந்தைகளை பாதுகாப்பதில் தமிழக அரசு அதீத அக்கறையுடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தாய் – சேய் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் உள்ள சவால்களை எதிர்கொள்வதில் அரசு, சுகாதார வல்லுநர்கள் மற்றும் களப்பணியாளர்கள் என ஒன்றிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தாய் – சேய் பாதுகாப்பில் அரசின் நடவடிக்கைகள்
மேலும், பச்சிளம் குழந்தைகள் இறப்பை குறைக்க, 2,650 கிராம சுகாதார தன்னார்வலர்கள், 54,439 அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் வாயிலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில், எடை குறைவாக பிறக்கும் ஐந்து குழந்தைகளை கண்காணிப்பவர்களுக்கு, 250 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
மேலும், மகப்பேறுக்கு முந்தைய மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்து, மக்களிடையே வலுவான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த முன்முயற்சிகள், தாய்மார்களுக்கு ஆரோக்கியமான கர்ப்பம் மற்றும் குழந்தைப் பருவத்திற்கு தேவையான விஷயங்களைத் தெரிந்துகொள்ள உதவுகின்றன. ஆரம்பகால, குழந்தை பிறப்புக்கு முந்தைய பரிசோதனைகள் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகளை எடுக்க ஊக்குவிப்பதன் மூலம், தமிழ்நாடு அரசு வெற்றிகரமான தாய் – சேய் சுகாதார கலாச்சாரத்தை வளர்த்து வருகிறது. இதன் மூலம் பச்சிளம் குழந்தை இறப்பு தொடர்புடைய ஆபத்துகள் குறைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், சென்னை, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ.2.97 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் ஒப்புயா்வு மையத்தை நேற்று திறந்து வைத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவில் ரூ.4.76 கோடி மதிப்பில் அதிநவீன உயிா்காக்கும் உயா் சிகிச்சை உபகரணங்கள், 27 தாய்ப்பால் வங்கிகளுக்கு ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் 78 நவீன மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றையும் தொடங்கி வைத்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே, தமிழ்நாட்டில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 38 சதவீதம் குறைந்துள்ள தகவலை அவர் தெரிவித்தார்.
பச்சிளம் குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் தமிழகத்திற்கு கிடைத்துள்ள இந்த வெற்றி, மாநிலத்தின் எதிர்கால சந்ததியினரை பேணி பாதுகாப்பதில் தமிழக அரசு கொண்டிருக்கும் அக்கறையையும் அசைக்க முடியாத உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது என்றே சொல்லலாம்!