குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற பீடித் தொழிலாளி மகள்… விடாமுயற்சியால் சாதித்த தென்காசி மாணவி!
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 95 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முதன்மை தேர்வுகள், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றன. இதில் 1,333 ஆண்கள், 780 பெண்கள் என மொத்தல் 2,113 பேர் தேர்வெழுதினர். இதில் 90 பேர் தேர்ச்சி பெற்றனர்.
கைகொடுத்த ‘நான் முதல்வன்’ திட்டம்
அப்படி தேர்ச்சி பெற்றவர்களில் ஒருவர், தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகில் உள்ள விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்தமாணவி எஸ். இன்பா. இவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த, ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்றுத் தேர்ச்சி பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது. இன்பாவின் தாயார் பீடிச்சுற்றும் தொழிலாளி. இது ‘நான் முதல்வன்’ திட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவும், இத்தகைய தேர்வுகளில் வெற்றி பெற்று சாதிக்க நினைப்பவர்களுக்கு ஊக்கமாகவும் பார்க்கப்படுகிறது.
இம்முறை குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களில் பலர், மிகவும் ஏழ்மையான நிலையில் தனது சொந்த முயற்சியில் வீட்டிலிருந்தே படித்து வெற்றி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிகின்ற மூன்று பெண் ஊழியர்கள், ஒரேநேரத்தில் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏறப்படுத்தியுள்ளனர். அதேபோல, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் எஸ்.இன்பா, குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
பொருளாதார வசதி இல்லாததால், வீட்டிலிருந்தே படித்துள்ளார். இவர், ஏற்கனவே இரண்டு முறை ஒன்றிய அரசின் குடிமைப் பணிகள் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை. எனினும், இன்பா விடாமுயற்சியுடன் மூன்றாவது முறையாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் அகில இந்திய அளவில் 851-வது இடத்தை பெற்றுள்ளார்.
இன்பா, நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் மாதம் ரூ.7, 500 உதவித்தொகை பெற்று இத்தேர்விற்கு படித்து வந்தார். 2023 ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் குடிமைப் பணிகள் தேர்வின் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து, மாதம் ரூ.25,000 உதவித்தொகை பெற்றார். தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் கிடைத்த உதவித்தொகையால் பொருளாதார தேவை பற்றிய கவலையின்றி, இன்பாவால் முழு கவனத்துடன் இத்தேர்விற்காக படித்து வெற்றி பெற முடிந்தது. படிப்புக்கு ஏழ்மை ஒரு தடையில்லை, முயன்றால் படித்து முன்னேறலாம். வெற்றி முகட்டைத் தொடலாம் என்பதை இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்துவதாக இன்பா வாழ்க்கையும், அவரது விடாமுயற்சியும் வழிகாட்டுகின்றன.
பீடி சுற்றும் ஒரு தொழிலாளியின் மகள் இன்பா விடாமுயற்சியுடன் படித்து, வென்று உயர்அதிகாரியாகப் பொறுப்பேற்கவிருக்கும் செய்தி அனைவருக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது. மாணவி இன்பாவை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேரில் அழைத்து பூங்கொத்து கொடுத்து பாராட்டியதுடன், தேநீர் விருந்து அளித்துள்ளார். மேலும், இதேபோன்று கிராமப்புற மாணவர்களும் அரசின் பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் மாணவி இன்பாவுக்கு பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.