கார் வாங்க லட்சங்களில் பணம் வேண்டாம்… ‘லீஸ்’ – க்கு எடுத்தே ஓட்டலாம்… ‘கியா’ நிறுவனத்தின் புதிய திட்டம்!
நம் மக்களிடையே கார் வைத்திருப்பது என்பது முன்னர் அந்தஸ்து ஆக கருதப்பட்ட நிலையில், இன்றைய காலகட்டத்தில் ஐந்திலக்க சம்பளம் வாங்குபவர்களே கார் வைத்திருப்பது என்பது சாதாரணமாகிவிட்டது. அதிலும் கார் வாங்க வங்கிகள் போட்டிப்போட்டு கடன் கொடுக்க முன்வருவதால், காரின் விலை லட்சங்களில் இருந்தாலும், அதிகம் யோசிக்காமல் வாங்கி விடுகின்றனர். அதிலும், ஓரளவு நல்ல வேலையில் இருக்கும் இளைஞர்களே கூட , இரு சக்கர வாகனத்துக்குப் பதிலாக கார் வாங்கி விடுகிறார்கள்.
சென்னை போன்ற பெருநகரங்களில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில் அதிகம் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்களே எனும்போது, கார் பயணம் என்பது பாதுகாப்பானதும் கூட. மேலும், இரு சக்கர வாகனம் வைத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்களின் அடுத்தகட்ட விருப்பம் என்பது கார் வாங்குவதாகவே இருக்கும். இன்னொருபுறம் ஏற்கெனவே கார் வாங்கியவர்களுக்கு கூட, பழைய மாடலை விற்றுவிட்டு, அதற்குப் பதிலாக சந்தைக்குப் புதிதாக வந்துள்ள காரை வாங்க விருப்பப்படுவார்கள். ஆனால் பட்ஜெட் இடிக்கும். மற்ற குடும்பத் தேவைகளுக்கான நிதித் தேவைகளும் இருக்கும்.
குத்தகைக்கு கார் எடுக்கும் திட்டம்
இப்படி புதிதாக கார் வாங்க ஏக்கத்துடன் இருப்பவர்களுக்காகவும், ஏற்கெனவே வாங்கிய காரை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்காகவும் என்றே, பணத்தைப் பற்றி அதிகம் யோசித்து தயங்கிக் கொண்டிருக்காமல், விரும்பிய காரை, ‘லீஸ்’ எனப்படும் குத்தகைக்கு கார் எடுக்கும் திட்டத்தை பிரபல தென் கொரிய கார் உற்பத்தி நிறுவனமான கியா (Kia) இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த நிறுவனம், இதற்காக ஓரிக்ஸ் ஆட்டோ (ORIX Auto Infrastructure Services Limited) எனும் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இதன்படி, சொனெட் (Sonet) மற்றும் செல்டோஸ் (Seltos) ஆகிய எஸ்யூவி ரக கார் மாடல்களையும், கேரன்ஸ் (Carens) எம்பிவி ரக கார் மாடலையுமே ‘லீஸ்’ – க்கு விடும் திட்டத்தின் கீழ் வழங்க, கியா இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
முன் பணம் தேவை இல்லை
இந்த புதிய ‘லீஸ்’ திட்டத்தில் இணையும் பயனர்கள் புதிய கார் வாங்கும் போது மேற்கொள்ள வேண்டிய பதிவு முறை, பராமரிப்பு மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்டவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். அவை அனைத்தையும் கியா நிறுவனமே பார்த்துக்கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட இன்னொரு முக்கியமான விஷயம், கார் வாங்குவதற்காக முன்பணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
பயனர்கள், விருப்பப்படும் காரை ‘லீஸ்’ – க்கு எடுக்கும் போது அனைத்து கட்டணங்களும் சேர்க்கப்பட்டு விடும். ‘லீஸ்’ எடுக்கும் திட்டத்தில் பயனர்கள்
குறைந்தபட்சம் 24 மாதங்கள் முதல் அதிகபட்சம் 60 மாதங்கள் வரை கார் லீஸ் எடுக்கலாம். குத்தகை காலம் முடிவடைந்ததும் விருப்பப்பட்டால், கியா கார்களில் வேறொரு மாடலை வாங்கிக் கொள்ள முடியும். இதனால் கார் வாங்கும் போது ஏற்படும் மறுவிற்பனை (RESALE VALUE )மதிப்பு இழப்பு பற்றி கவலைப்பட வேண்டாம்.
மாத வாடகை எவ்வளவு?
‘லீஸ்’ திட்டத்தின் கீழ், கார்களின் வாடகை மாதம் ரூ. 21, 900 முதல் அதிகபட்சம் ரூ. 28,800 வரை வசூலிக்கப்படும். முதற்கட்டமாக இந்த திட்டம் டெல்லி என்சிஆர், மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை மற்றும் புனே ஆகிய நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குத்தகை காலம் முடிவடைந்துவிட்டால், அதே காரை மீண்டும் குத்தகைக்கு எடுத்துக் கொள்ள முடியும் அல்லது அந்த வாகனத்தை நிறுவனத்திடமே ஒப்படைத்திடவும் செய்யலாம். அல்லது வேறு வாகனத்திற்கு மாறும் வசதியும் உண்டு.
இந்தியாவில், ஏற்கெனவே இந்த ‘லீஸ்’ திட்டத்தை ஹோண்டா, மாருதி சுஸுகி, ஹூண்டாய், ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா ஆகிய நிறுவனங்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.