Amazing Tamilnadu – Tamil News Updates

காமராஜருக்கு நடந்த அதே நிகழ்வு… காலை உணவுத் திட்டத்தின் பின்னணியைப் பகிர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின்!

மிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த காலை உணவுத் திட்டத்துக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், மாணவர்களின் பள்ளி வருகை சதவீதம் அதிகரித்துள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த காலை உணவுத் திட்டத்தை தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும், தங்கள் மாநிலத்திலும் அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், கனடா நாட்டிலும் இந்த காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தப்போவதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்திருப்பதாக நேற்று தகவல் வெளியானது.

இது குறித்து திமுக தரப்பில், “தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம், இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி” என பெருமிதத்துடன் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த காலை உணவுத் திட்டத்தைக் கொண்டு வர தனக்கு தூண்டுகோலாக இருந்த நிகழ்வு ஒன்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில், அரக்கோணம் வேட்பாளர் ஜெகத்ரட்சகன், வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோரை அறிமுகப்படுத்தி உரையாற்றியபோது இது தொடர்பாக பேசிய அவர், “நம்முடைய திராவிட அரசைப் பொறுத்தவரை, ‘எல்லோருக்கு எல்லாம்’ – ‘அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலான – சீரான வளர்ச்சி’ என்ற அடிப்படையில்தான் செயல்பட்டு வருகிறது.

இன்றைக்குக் காலையில் நான் பெருமைகொள்ளும் ஒரு செய்தியை சமூக வலைதளங்களில் பார்த்தேன். நம்முடையத் திட்டங்கள் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே முன்னோடியாக இருக்கிறது. இன்றைக்கு கனடா நாட்டில், காலை உணவுத் திட்டம் கொண்டு வந்துள்ளார்கள்.

காமராஜருக்கு நடந்த அதே நிகழ்வு

இந்தத் திட்டம் எப்படி உருப்பெற்றது? பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்ததற்குக் காரணமாக ஒரு சம்பவம் சொல்வார்கள். பெருந்தலைவர் அவர்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது, விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைச் சந்தித்தாராம். “இன்றைக்குப் பள்ளிக்குப் போகவில்லையா?” என்று கேட்டிருக்கிறார். “குடும்பத்தில், உணவுக்கே வழியில்லாததால் – எங்கள் அப்பா-அம்மா பள்ளிக்கு அனுப்பவில்லை” என்று அந்த சிறுவர்கள் சொல்லவும், பள்ளியில் மதிய உணவு அளித்தால் அதற்காகவாவது குழந்தைகளைப் படிக்க அனுப்புவார்கள் என்று சிந்தித்த பெருந்தலைவர் மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கினார்.

எனக்கும் அதுமாதிரி ஒரு நிகழ்வு நடந்தது! நான் முதலமைச்சர் ஆனவுடன், சென்னையில் ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு காலையில் சென்றிருந்தேன். ஒரு குழந்தையைப் பார்த்து, ‘என்னம்மா சாப்ட்டீங்களா’ என்று யதார்த்தமாக கேட்டேன். அதற்கு அந்தக் குழந்தை, ‘வீட்டில் அப்பா–அம்மா வேலைக்குச் செல்கிறார்கள்… காலையில் டிபன் செய்ய மாட்டார்கள்… அதனால் சாப்பிடவில்லை’ என்று சொன்னதும், எனக்கு மனதே சரியில்லை! கோட்டைக்குச் சென்றவுடன், அதிகாரிகளை அழைத்தேன். ‘பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் கொண்டு வர வேண்டும், திட்டத்தைத் தயார் செய்யுங்கள்’ என்று சொன்னேன்.

அதிகாரிகள் என்னிடம் சார், ‘நம்முடைய நிதிநிலை மோசமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இது நம்முடைய தேர்தல் அறிக்கையில்கூட சொல்லவில்லை’ என்று கூறினார்கள். உடனே நான் சொன்னேன், ‘வாக்குறுதி கொடுக்கவில்லை என்றால் என்ன? நம்முடைய எதிர்காலத் தலைமுறை குழந்தைகள்தான். அவர்கள் காலையில் நன்றாக சாப்பிட்டு, நல்ல உடல்நலத்துடன் இருந்தால்தான் அவர்கள் படிப்பது மனதில் பதியும். இதை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும். நிதிநிலை சரி செய்யவும் திட்டம் போடுவோம். நீங்கள் ஃபைல் தயார் செய்யுங்கள்’ என்று உத்தரவு போட்டேன். அப்படி கொண்டு வந்த கோப்பில் கையெழுத்து போட்ட கைதான் இந்த ஸ்டாலின் கை.

வரலாறும் – மக்களான நீங்களும் இந்த ஸ்டாலினுக்குக் கொடுத்த வாய்ப்பால், இன்றைக்கு, தமிழ்நாடு முழுவதும் 16 லட்சம் குழந்தைகள் வயிறாரச் சாப்பிடும் காலை உணவுத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுகிறது” எனத் தெரிவித்தார்.

Exit mobile version