ஒரு கிலோ ஸ்வீட்டில் ஒட்டுமொத்த ‘ரோடு ஷோ’வையும் காலி செய்த ராகுல் காந்தி!
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளும் அரசியல் கட்சித் தலைவர்களின் பேச்சுகள் ஒருபக்கம் கோடை வெயிலையும் தாண்டி உக்கிரமாக தகித்துக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் கோவையில் பிரசாரத்துக்கு வந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ‘எனது சகோதரர் ஸ்டாலினுக்காக’ எனச் சொல்லி கடையில் ஸ்வீட் வாங்கிய நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி, பாஜக-வின் ‘ரோடு ஷோ’ வை ஒட்டுமொத்தமாக காலி செய்துவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி-யுமான ராகுல் காந்தி நேற்று தமிழ்நாடு வந்தார். பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே அமைந்துள்ள பெல் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கோவையில் பிரசாரம்
இதில் கலந்து கொண்டு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் சென்ற அவர், அங்கிருந்து தனி விமானம் மூலம், கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலமாக, கோவை செட்டிப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து கோவை, பொள்ளாச்சி, கரூர் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சார பரப்புரையில் ஈடுபட்டார்.
ஸ்டாலினுக்காக வாங்கிய ஸ்வீட்
முன்னதாக கார் மூலம் செட்டிப்பாளையம் நோக்கி வந்துகொண்டிருந்த ராகுல் காந்தி, சிங்காநல்லூர் என்ற இடத்திற்கு வந்தபோது காரை நிறுத்தச் சொல்லி இறங்கினார். அதனையடுத்து சாலையின் தடுப்புச் சுவரை தாண்டிக் குதித்து, எதிரே இருந்த ஒரு ஸ்வீட் கடைக்குள் நுழைந்தார் ராகுல் காந்தி. ராகுல் காந்தி தங்களது கடைக்குள் வருவதைக் கண்ட கடையின் உரிமையாளரும் ஊழியர்களும் அவரை வரவேற்று அவருடன் கைகுலுக்கி மகிழ்ந்தனர்.
அருகில் இருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடை ஊழியரிடம் மைசூர் பாக் கொடுங்கள் என்று கேட்டார். அப்போது ராகுல் காந்தியைப் பார்த்து “யாருக்காக ஸ்வீட் வாங்குகிறீகள் சார்?” என்று கடையில் பணிபுரியும் பெண் ஒருவர் கேட்கவே, அவரிடம் “என் சகோதரர் ஸ்டாலினுக்காக” என்று பதிலளித்தார் ராகுல்.
பின்னர் தான் வாங்கிய ஸ்வீட்டுக்காக ராகுல் காந்தி பணத்தைக் கொடுத்துவிட்டு, கிளம்ப முயன்றார். அப்போது கடை ஊழியர்கள், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்ததும், உடனடியாக மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்ட ராகுல் காந்தி, அவருகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அங்கிருந்து விடைபெற்றுக் கிளம்பி, கோவை பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார். அங்கு அவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தான் வாங்கிய ஸ்வீட் பையை, “உங்களுக்காக நான் வாங்கியது” எனச் சொல்லி கொடுத்தார். ஸ்டாலினும் அதை இன்முகத்துடன் பெற்றுக் கொண்டார்.
வைரலான வீடியோ
பொதுக்கூட்டத்துக்கு வந்த மக்கள் இந்த நிகழ்வை பார்த்து மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்களிடையே உற்சாகம் மேலிட்டது.
இந்த நிலையில், ஸ்வீட் கடைக்குச் சென்று ஸ்வீட் வாங்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, “தமிழ்நாட்டில் தொடர் பிரசாரத்துக்கு கொஞ்சம் இனிமையை சேர்க்கிறேன் – என்னுடைய சகோதரர் ஸ்டாலினுக்காக சிறிது மைசூர் பாக் வாங்கினேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், தமிழ்நாடு மட்டுமல்லாது இந்திய அளவிலும் அனைத்து ஊடகங்களிலும் இந்த நிகழ்வு குறித்த செய்தியும் வீடியோவும் இடம்பெற்று பேசுபொருளாகி உள்ளது.
பாஜக ரோடு ஷோ-க்களை காலி செய்த ராகுல்
முன்னதாக பிரதமர் மோடி அண்மையில்தான் தமிழ்நாட்டிற்கு சில முறை வந்து பிரசாரம் மேற்கொண்டிருந்தார். கோவையிலும், சென்னையிலும் ‘ரோடு ஷோ’வும் நடத்தி இருந்தார். ஆனால், இந்த இரண்டு ரோடு ஷோவிலும் மக்கள் கூட்டம் அவ்வளவாக இல்லை எனக் கூறப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மதுரை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து, மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை அடுத்த நேதாஜி சாலையில் தொடங்கி தெற்கு ஆவணி மூல வீதி வழியாக விளக்குத்தூண் பகுதி வரை ரோடு-ஷோ மூலமாக பிரசாரம் மேற்கொண்டார். அதேபோன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தஞ்சாவூர் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து, ரோடு ஷோ மூலம் பிரசாரம் மேற்கொண்டார்.
ஆனாலும், இவர்களின் இந்த இரு ரோடு ஷோ நிகழ்வுகளையும், மோடியின் ரோடு ஷோ நிகழ்வுகளையும் கோவையில் நேற்று ராகுல் காந்தி ஸ்வீட் வாங்கிய நிகழ்வு தொடர்பான வீடியோவும், பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையும் ஒட்டுமொத்தமாக காலி செய்துவிட்டதாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ஸ்டாலின் நெகிழ்ச்சி
இதனிடையே ராகுலின் வீடியோவை பகிர்ந்து, “என் சகோதரர் ராகுல் காந்தி இனிப்பு வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜூன் 4 ஆம் தேதி இந்தியா நிச்சயம் அவருக்கு இனிப்பான வெற்றியை அளிக்கும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.