கள்ளக்குறிச்சி: அதிமுகவின் சிபிஐ விசாரணை கோரிக்கையும் முதலமைச்சரின் விளக்கமும்!

ள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சியான அதிமுக வலியுறுத்தி வருகிறது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக-வினர் கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வருகின்றனர்.

நேற்று இவ்விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்ததோடு, அவை நடவடிக்கைகளையும் முழுமையாக புறக்கணித்த நிலையில், இன்று காலையும் அவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் அவை நடவடிக்கையில் பங்கேற்க இன்று ஒரு நாள் தடை விதிக்கப்பட்டதோடு, சபாநாயகர் அப்பாவுவின் உத்தரவின் பேரில் அவையிலிருந்தும் வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில், சட்டசபையில் இது தொடர்பாக பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், எதிர்க்கட்சியின் செயல் குறித்தும் விவரித்தார்.

கலவரத்தை உருவாக்க திட்டம்

“கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக இதே அவையில் கடந்த 20-06-2024 அன்று ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இந்த அவையிலே விரிவாகப் பேசியிருக்கிறார்கள். அதற்கு நானும் சரியான விளக்கத்தை அளித்திருக்கிறேன். அன்றையதினம் அவையில் இருந்து, முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தனது கருத்தைப் பதிவு செய்திருக்க வேண்டும். மாறாக, தேவையற்ற பிரச்னையை அவை கூடியதும் கிளப்பினார்கள். அவையினுடைய விதிமுறைப்படி, கேள்வி நேரம் முடிந்ததற்குப் பிறகுதான் மற்ற அலுவல்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படித்தான் விதி இருக்கிறது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விதிமுறையை மீறி, உடனடியாக அந்தப் பிரச்னையை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று இங்கே ஒரு பெரிய ரகளையே செய்திருக்கிறார்கள்.

கேள்வி-பதில் நேரம் முடிந்ததும் கள்ளக்குறிச்சி பிரச்னையைப் பற்றித்தான் விவாதிக்கப் போகிறோம் என்று பேரவைத் தலைவர் தெளிவாகக் குறிப்பிட்டுச் சொல்லியும், அதையும் மீறி அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு, ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக திட்டமிட்டு அப்படி நடந்து கொண்டார்கள். அதற்குப்பிறகு நீங்கள் ( சபாநாயகர் ) வேறு வழியில்லாமல் அவர்களை அன்றைக்கு அவையிலிருந்து வெளியேற்றியிருக்கிறீர்கள். அதற்குப்பிறகுதான் நான் அன்றைக்கு அவைக்கு வந்தேன்; வந்ததற்குப்பிறகு இதைக் கேள்விப்பட்டவுடன், மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறபோது எதிர்க்கட்சி, அதுவும் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. அவையில் இருக்க வேண்டும்; எனவே மறுபரிசீலனை செய்து இதை சரிசெய்ய வேண்டுமென்று நான் உங்களிடத்திலே வேண்டுகோள் வைத்தேன். நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அவர்கள் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அனுமதித்தீர்கள். ஆனால், அதற்குப்பிறகும் அதையும் ஏற்றுக்கொள்ளாமல், மீண்டும் மீண்டும் இந்த அவைக்கு வந்து ஒரு கலவரத்தை உருவாக்க வேண்டுமென்பதற்காக திட்டமிட்டு இப்படிப்பட்ட காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

40/40 வெற்றி கண்ணை உறுத்துகிறது

வேறு ஒன்றுமல்ல; நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது அது அவர்களுடைய மனதை உறுத்துகிறது; கண்ணை உறுத்துகிறது. அதை மக்களிடமிருந்து எப்படி மாற்றுவது என்பதற்காக இந்தக் காரியத்தைத் திட்டமிட்டு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தபோது, அதற்கு என்னென்ன பரிகாரம் செய்யப்போகிறோம் என்பதைப் பற்றியெல்லாம் நான் பல்வேறு விளக்கங்களைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கான உண்மையான காரணத்தை அறிய நீதியரசர் கோகுல்தாஸ் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது; சி.பி.சி.ஐ.டி. வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது; உள்துறைச் செயலாளரையும், டி.ஜி.பி.யையும் ஆய்வு செய்து, உடனடியாக அறிக்கை தரச் சொல்லி இருக்கிறேன்; குற்றவாளிகளில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; பலர் தேடப்பட்டு வருகிறார்கள்;

கள்ளச்சாராயம், விஷச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன; இறந்தோர் குடும்பத்துக்கு பத்து லட்சம் ரூபாய் தரப்பட்டு, பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது; பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி, வாழ்க்கை பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது; மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டுள்ளார்; மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்; மதுவிலக்கை கவனித்து வந்த ஏ.டி.ஜி.பி. கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார். இப்படிப்பட்ட நடவடிக்கைகளை 24 மணி நேரத்தில் இந்த அரசு எடுத்திருக்கிறது என்பதெல்லாம் உங்களுக்கு நன்றாகத்தெரியும்.

சி.பி.ஐ. விசாரணை

இதற்கிடையில் நேற்றையதினம் கூட ஆர்ப்பாட்டங்களெல்லாம் செய்திருக்கிறார்கள். ஆர்ப்பாட்டம் செய்வது என்பது நியாயம்தான். ஜனநாயகத்தில் எல்லோருக்கும் அந்த உரிமை இருக்கிறது. ஜனநாயகத்திலே இருக்கக்கூடிய உரிமை அது. யார் வேண்டுமானாலும் ஆர்ப்பாட்டம் செய்யலாம். அது நியாயமான முறையில் ஆர்ப்பாட்டமாக இருந்தால், அரசு அதற்கு அனுமதி அளிக்கும். ஆனால், அந்த ஆர்ப்பாட்டத்திலேகூட திரும்பத் திரும்ப சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று பேசியிருக்கிறார்கள்.

இதே எதிர்க்கட்சித் தலைவர் அப்போது முதலமைச்சராக இருந்தபோது, அவர் மீது சி.பி.ஐ. விசாரணை கொண்டுவரப்பட்டதை அவர் மறந்திருக்க மாட்டார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எதிர்க்கட்சித் தலைவர் மீது ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி, அதிலே முறைகேடு நடந்திருக்கிறது; அதற்கு சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டுமென்று நீதிமன்றத்திற்குச் சென்றபோது, அதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது. சி.பி.ஐ. மீது நம்பிக்கை இருந்தால் அதை ஏற்றுக்கொண்டு, அந்தச் சவாலை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், சி.பி.ஐ. மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால்தான், அதற்குத் தடை உத்தரவு வாங்கிய வீராதி வீரர்தான் இன்றைக்கு இந்த விஷயத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்று முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இதுகுறித்து பேரவைத் தலைவர் அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2020 leroy agency press + direct news today + 1 news today broadcasting + erika leroy de saxe. Trumр demands cbs be ѕtrірреd оf lісеnсе оvеr еdіtеd harris іntеrvіеw. Hest blå tunge.