கள்ளக்குறிச்சி விவகாரம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் அளித்த விளக்கம் என்ன?
கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக உரையாற்றினார்.
அவரது உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் இங்கே…
“கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தைச் சேர்ந்த 47 நபர்கள் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் அருந்திய காரணத்தினால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்த மிகவும் துயரமான சம்பவம் குறித்து உங்களைப் போலவே நானும் மிகுந்த வேதனையும், வருத்தமும் அடைந்தேன். இறந்து போன உயிர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை நான் தெரிவித்துக் கொள்கிறேன். உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு கருத்துகள் இந்த அவையில் தெரிவிக்கப்பட்டு வரக்கூடிய நிலையிலே, பேரவைத் தலைவர் அவர்களுடைய அனுமதியோடு ஒரு சில விவரங்களை இந்த அவைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
புதுச்சேரியில் இருந்து வந்த மெத்தனால்
இந்தச் சம்பவம் தொடர்பாக, கோவிந்தராஜ் என்கிற கண்ணுக்குட்டி என்பவர் காவல்துறையினரால் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடமிருந்து 200 லிட்டர் மெத்தனால் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய தாமோதரன், மதன், விஜயா (க/பெ. கோவிந்தராஜ்) ஆகிய 3 நபர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்களோடு தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்பதை இந்தப் பேரவைக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். நம் அனைவருக்கும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு வேதனையை அளித்துள்ள இந்தத் துயர சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை தாங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.
கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள்
தமிழ்நாடு அரசு, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல், போலி மதுபானங்கள் கடத்துவது மற்றும் விற்பனை செய்வது போன்ற குற்றச் செயல்கள் நடைபெறாவண்ணம் இதில் சிறப்புக் கவனம் செலுத்தி, தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அரசின் அறிவுரையின்படி, கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் காவல் துறை, வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மாவட்ட மேலாளர் ஆகியோரைக் கொண்டு ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது பாரபட்சமின்றி குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த அரசுப் பொறுப்பேற்றதிலிருந்து 14 ஆயிரத்து 606 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10 ஆயிரத்து 154 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 58 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இப்படி இந்த அரசானது கள்ளச்சாராயத்தை அறவே ஒழிப்பதற்கு மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையிலும், இதுபோன்ற சில விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படுவது மிகவும் வேதனைக்குரியது.
‘குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும்‘
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும், அவர்களின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு 10 இலட்சம் ரூபாய் நிவாரண நிதியுடன் கூடுதலாக நிவாரணங்கள் வழங்கப்படும். பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும்.
‘எந்தப் பிரச்னையில் இருந்தும் ஓடி ஒளிய மாட்டேன்’
‘நடைபெற்ற சம்பவத்துக்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்’ என்று இங்கு பேசினார்கள். உள்துறையைக் கவனிப்பவன் என்ற முறையில் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் எந்தப் பிரச்னையில் இருந்தும் ஓடி ஒளிபவனல்ல நான். பொறுப்பை உணர்ந்ததால்தான் பொறுப்புடன் பதில் அளித்துக் கொண்டிருக்கிறேன். எடுத்த நடவடிக்கைகளையும் பட்டியலிட்டிருக்கிறேன். குற்றவாளிகளைக் கைது செய்து விட்டுத்தான் உங்களுக்கு பதில் அளித்திருக்கிறேன். திறந்த மனத்தோடு இரும்புக் கரம் கொண்டு குற்றம் புரிந்தவர்களை அடக்கி வருகிறேன்.
துயரம் மிகுந்த இந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். என்னை பொறுத்தவரை, சமூக விரோத சக்திகளிடம் இருந்து மக்களைக் காக்க எந்தவிதமான கடுமையான நடவடிக்கைகளையும் எடுப்பேன்” என உறுதி அளித்தார்.