பள்ளி மாணவர்களுக்கு நமது பண்பாட்டை விளக்குவதற்கு கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திருவிழாவில் தமிழகத்தில் உள்ள கலை வடிவங்களை அறிமுகப்படுத்துவதும் மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்துவதும்தான் நோக்கம். சிலம்பாட்டம், கரகாட்டம் என்று தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைத்திறன்கள் நிறைய உள்ளன. அந்தத் திறமை படைத்த மாணவர்கள், தங்களின் திறனை வெளிக்காட்டுவதற்கும் திறன்களை மேலும் வளர்த்துக் கொள்ளவும் இந்தக் கலைத்திருவிழாக்கள் உதவுகின்றன.
இன்று சென்னையில் துவங்கி உள்ளது அந்தக் கலைவிழா. சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகள் பங்கேற்கும் கலைத் திருவிழா நிகழ்ச்சிகள் பள்ளி அளவில் நடைபெறுகிறது. வருகிற 14ம் தேதி வரையில் இந்தத் திருவிழா நடைபெறுகிறது. வட்டார அளவில் இதே திருவிழா வரும் 18-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. மாவட்ட அளவில் 26-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரையில் நடைபெறுகிறது.
மாணவர்களின் கல்வித் திறனையும் அறிவியல் திறனையும் வளர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதே சமயத்தில் நமது பண்பாட்டையும் தமிழர்களுக்கென்றே உள்ள தனிச் சிறப்பையும் வெளிக்கொண்டு வரவும், அதை மாணவர்கள் மத்தியில் பரவச் செய்யவும் இத்தகைய விழாக்கள் நடத்தப்படுகின்றன.