உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நாளை தொடங்குகிறது. இரண்டு நாள் நடைபெற உள்ள இந்த பிரம்மாண்டமான மாநாடு, ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்றும் நடவடிக்கையின் ஒரு முக்கியமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
‘அமெரிக்காவில் இருந்தும் ஐரோப்பாவில் இருந்தும் முதலீட்டாளர்களை ஈர்த்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்கச் செய்வதற்கான ஒரு மிக முக்கியமான முயற்சியே இந்த மாநாடு’ என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த மாநாட்டில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
50 உலக நாடுகளில் இருந்து 450 க்கும் மேற்பட்ட பன்னாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். உலகப் புகழ் பெற்ற 170 பேச்சாளர்கள் இந்த மாநாட்டில் உரையாற்ற இருக்கின்றனர். தலைமைப் பண்பு குறித்த 26 அமர்வுகள், குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான காட்சியரங்குகள், தமிழ்நாட்டின் தொழிற்சூழலுக்கான காட்சியரங்குகள், உலக நாடுகளுக்கான காட்சியரங்குகள், ஸ்டார்ட் அப் தமிழ்நாடு காட்சியரங்குகள் இந்த மாநாட்டில் இடம் பெறுகின்றன.
இந்த விபரங்களை தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டின் தொழில் மரபைக் கொண்டாடி இம்மாநிலம் வழங்கும் எல்லையற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள எங்களோடு இணையுங்கள்” என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.