கல்வி உதவித்தொகை தருவதாக மோசடி: மாணவர், பெற்றோர்கள் உஷார்!
தமிழ்நாட்டில் தற்போது 10, 11, 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் முடிவடைந்துவிட்டன. அதேபோன்று 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கும் விரைவில் கோடை விடுமுறை விடப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து, தங்கள் பிள்ளைகளின் அடுத்த ஆண்டு கல்விச் செலவுக்கான எவ்வளவு ஆகும், அதை எப்படி திரட்டுவது என்பது குறித்த ஆலோசனை பெற்றோர்கள் மத்தியில் தீவிரமாக உள்ளது.
அதிலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்துள்ள மாணவ, மாணவிகள் இருக்கும் வீடுகளில் அடுத்து என்ன படிப்பை தேர்வு செய்யலாம், அதற்கு எவ்வளவு செலவாகும் என்றெல்லாம் தீவிரமாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான், பெற்றோர்களின் இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக்கி, பண மோசடியில் ஈடுபடும் கும்பல்கள் தங்கள் கைவரிசையைக் காட்டத்தொடங்கி உள்ளன.
அந்த வகையில், கல்வி உதவித்தொகை திட்ட அதிகாரிகள் பேசுவதாக கூறி, சில மாணவர்களின் பெற்றோர்களைத் தொடர்புகொள்ளும் கும்பல், கல்வி உதவித்தொகை திட்டத்துக்காக, சம்பந்தப்பட்ட மாணவரின் பெயர், பெற்றோர் விபரம், வங்கி கணக்கு விபரங்களைக் கேட்டு, ஓடிபி அனுப்பி பணமோசடி செய்வதாக புகார்கள் வரத்தொடங்கி உள்ளன. குறிப்பாக, கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில், இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
வாட்ஸ்ட ஆப் செயலி மூலம் தாங்கள் அனுப்பும் QR கோடை, அதை ஸ்கேன் செய்ய சொல்கின்றனர். அவ்வாறு ஸ்கேன் செய்யும்போது சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிலிருந்து பணத்தைப் பறித்துள்ளனா். எனவே, யாரும் இது போன்று பேசுபவா்களின் வாா்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், மத்திய, மாநில அரசுகளிடமிருந்து கல்வி உதவித் தொகை தொடா்பாக எந்தவொரு அதிகாரியும் தங்கள் கைப்பேசிகளுக்கு தொடா்பு கொள்ளமாட்டார்கள் என்றும் கல்வித்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
“இந்த விஷயத்தில் பெற்றோர் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், கல்வி உதவித்தொகைக்காக, கல்வித்துறை உள்பட வேறு எந்த அரசு துறைகளில் இருந்தும் போனில் அழைத்து, விபரம் கேட்கமாட்டார்கள்” என அறிவுறுத்தி உள்ள அதிகாரிகள், இது தொடர்பாக ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.