கலைஞர் மகளிர் உரிமை நிதித் திட்டம்: தமிழ்நாட்டில் ஒரு ‘கேம் சேஞ்சர்’!
தமிழ்நாடு…. சமூக நீதிக்கும் சமத்துவத்துக்கும் மட்டுமல்ல மகளிர் உரிமை, மகளிர் கல்வி, மகளிர் மேம்பாடு, மகளிருக்கான அதிகாரம் அளித்தல் போன்றவற்றிலும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்னுதாரணமாக திகழும் மாநிலம்.
பெண்களுக்கு சொத்துரிமை, அரசு வேலைகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு, மகளிர் சுயஉதவி குழுத் திட்டம், பெண்களுக்கு இலவச பட்டப்படிப்புத் திட்டம், கைம்பெண்களுக்கான மறுவாழ்வுத் திட்டம், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்களுக்கு உதவி, ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, நகர அரசுப் பேருந்தில் கட்டணமில்லா பயணம்… என மகளிருக்காக திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்
அந்தவகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், ஆண்களுக்கு இணையாக சம வாய்ப்புகளை பெறுவதிலும், பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் மிக முக்கியமானது என்றால், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்.
குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு மாத 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இத்திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதியிலிருந்து செயல்படுத்தி வருகிறது முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.
இத்திட்டத்தின்கீழ், 1.06 கோடி தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான உரிமைத் தொகையானது ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 1,000 வீதம் முதல் தவணையாக மொத்தம் ரூ. 1,065 கோடியே 21 லட்சத்து 98 ஆயிரம் அவர்களின் வங்கிக் கணக்கில் அளிக்கப்பட்டுள்ளது.
திமுக அரசின் அர்ப்பணிப்பு உணர்வு
இந்த நிலையில், அக்டோபர் 15 ஆம் தேதி விடுமுறை நாள் என்பதால், இந்த மாதத்திற்கான உரிமைத்தொகை 1,000 ரூபாய் ஒரு நாள் முன்னதாக, அதாவது அக்டோபர் 14 அன்றே வரவு வைக்கப்பட்டுள்ளது பயனாளிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம், இந்த திட்டத்தில் அரசு எத்தனை ஈடுபாடு காட்டுகிறது என்பதை புரிந்துகொள்ளலாம். மேலும், இத்தனை பயனாளிகளுக்கு ஒரே நேரத்தில் வங்கிக் கணக்கில் அரசின் நலத்திட்ட நிதி வரவு வைக்கப்பட்டது இதுவே முதன்முறை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
அதுமட்டுமல்ல, இந்த திட்டத்தில் தகுதியான பயனாளி ஒருவர்கூட விடுபட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் திருநங்கைகள் உள்ளிட்ட பல்வேறு தகுதியான குடும்பத் தலைவியர் கண்டறியப்பட்டு, அக்டோபர் மாதத்திற்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். பெண்கள் முன்னேற வேண்டும், பொருளாதார ரீதியான சுதந்திரத்தை அவர்கள் பெற வேண்டும் என்ற திமுக அரசின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு இது ஒரு சான்றாகும்.
தமிழ்நாட்டில் ஒரு ‘கேம் சேஞ்சர்’
சில திட்டங்கள் தொடங்கப்பட்டு சில காலத்திற்குப் பிறகே பலன் தர ஆரம்பிக்கும். ஆனால், மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தைப் போன்றே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், தொடங்கப்பட்ட நாள் முதலே சிறப்பான நல்ல விளைவுகளை ஏற்படுத்தி, தமிழ்நாட்டில் ஒரு ‘கேம் சேஞ்சர்’! ஆக திகழ்கிறது என்றால் அது மிகையில்லை.
பொருளாதார ரீதியில் பெண்கள் தங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கும், தங்களது பிள்ளைகளின் படிப்புச் செலவுகளை சமாளிப்பதற்கும், சிறிய முதலீட்டுடன் கூடிய பூ, காய்கறி, பழங்கள் வியாபாரம், சிற்றுண்டி கடை போன்ற சுய தொழிலில் ஈடுபடவும், யாரிடமும் கையேந்தாமல் சுயமரியாதையுடன் வாழ்வதற்கான வாய்ப்பையும் இந்த திட்டம் அவர்களுக்கு வழங்கி உள்ளது.
திமுக அரசின் இதுபோன்ற தொலைநோக்கு திட்டங்களும் மகளிர் நலக் கொள்கைளும் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. ‘அரசாங்கங்கள், பெண்களுக்கு அதிகாரம் அளித்து அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்த முடியும்’ என்பதற்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது.