கலைஞர் மகளிர் உரிமை திட்டமும் நுணுக்கமான தேர்வு முறையும்!
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தகுதி உடைய யாரும் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக முதலமைச்சர், தலைமைச் செயலாளர் தொடங்கி ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தின் தன்னார்வலர்கள் வரை அரசின் அனைத்து மட்டங்களிலும் காட்டப்பட்ட உழைப்பு குறித்த பின்னணி மற்றும் அதில் காட்டப்பட்ட நுணுக்கமான தேர்வு முறை, திட்டமிடல் குறித்த தகவல்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன.
தமிழ்நாட்டில் 1.06 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம், கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவா்களில் சுமார் 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்தனர். அவர்களில் 7 லட்சத்து 35,000 பேர் தகுதியானவர்களாகக் கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை அளிக்கப்படவுள்ளது. இதன் மூலம் மகளிர் உரிமைத் தொகை பெறுவோர் எண்ணிக்கை 1,13,84,300-ஆக உயர்ந்துள்ளது.
நுணுக்கமான தேர்வு முறை, திட்டமிடல்
இந்த நிலையில், புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த திட்டத்தில் எவ்வித குறைபாடோ புகாரோ வரக்கூடாது என்பதில் தனது தலைமையிலான அரசு காட்டிய அக்கறையையும், அதன் பின்னால் இருந்த உழைப்பு, திட்டமிடல், நுணுக்கமான தேர்வு முறை உள்ளிட்டவற்றை விளக்கினார்.
அவர் பேசும்போது, “ இந்த உரிமைத் தொகை உண்மையிலேயே தேவையும், தகுதியும் உள்ள அனைத்து மகளிருக்கும் போய்ச் சேரவேண்டும் என்பதில் நம்முடைய அரசு மிகவும் கவனமாக இருந்தது.
தகுதி உள்ளவர்கள் யார் யாரென்று நேர்மையான, பாரபட்சமற்ற விதிமுறைகளின் அடிப்படையில், அரசு சார்பில் வெளியிடப்பட்டு, தமிழ்நாட்டில் இருக்கின்ற அத்தனை குடும்ப அட்டைதாரர்களையும் விண்ணப்பிக்க சொன்னோம். வி.ஏ.ஓ அலுவலகம், தாலுகா அலுவலகம் என்று எங்கேயும் செல்லாமல் அலைச்சலில்லாமல், பொதுமக்களுக்கு எந்தச் சிரமமும் இல்லாமல் இருக்கவேண்டும் என்று அரசே உங்களிடம் வந்து விண்ணப்பங்களை வாங்க எப்படி வாங்கினார்களோ அதேபோல, அந்த விண்ணப்பங்களை வாங்குகின்ற முகாம்களை அமைக்க சொன்னேன்.
இந்தத் திட்டத்தின் நோக்கத்தையும், விதிமுறைகளின் குறிக்கோளையும் மக்கள் உள்ளார்ந்து புரிந்து கொண்ட காரணத்தால், 2 கோடியே 24 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில், 1 கோடியே 63 லட்சம் மகளிர் மட்டும் விண்ணப்பித்தார்கள்! மக்களுடைய இந்த புரிதல், இந்தத் திட்ட விதிமுறைகளுக்கான நியாயத்தை காண்பித்தது. விமர்சித்தவர்கள் அமைதி ஆகிவிட்டார்கள்.
“தலைமைச் செயலாளர் முதல் தன்னார்வலர்கள் வரை…‘
தகுதியுள்ள யாரும் விடுபட்டுவிட கூடாது என்று கவனமாக இருக்கிறோம். அதானல்தான், விண்ணப்பித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற காரணத்தை, குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்தோம். அந்தக் காரணம் ஏற்புடையதாக இல்லையென்றால், மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு கொடுத்தோம். அதை பயன்படுத்தி, மேல்முறையீடு செய்தார்கள். அவர்களுடைய விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம்.
எந்தவிதமான சர்ச்சைக்கும் இடமளிக்காத வகையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்திக்காட்டிய பெருமை, அரசு அலுவலர்களையும், பணியாளர்களையும்தான் போய்ச் சேரும்!
இந்தத் திட்டத்திற்குப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அமைச்சர் உதயநிதி அவர்கள், அரசு அலுவலர்களுடன் இந்தத் திட்டச் செயல்பாடு குறித்து தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள நடத்திக்கொண்டே இருப்பார்.
நம்முடைய தலைமைச் செயலாளர், வளர்ச்சி ஆணையர், நிதித் துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கடந்த சில மாதங்களாக, ஏறக்குறைய 50 முறைக்கும் மேலாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி இந்தத் திட்டத்தில் எந்தவித குறைபாடும் ஏற்படாமல் செயல்படுத்துவது குறித்து விவாதித்திருக்கிறார்கள்.
‘வியக்க வைத்த நிர்வாக நடைமுறை, திட்டமிடல்’
ஒட்டுமொத்தமாக சொல்லவேண்டும் என்றால், மாண்புமிகு அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் முதல், தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் என அனைத்து நிலை பணியாளர்களும் தொடர்ந்து உழைத்ததின் விளைவுதான், இந்த மாபெரும் வெற்றி!
இது, ஊர் கூடி, ‘இழுத்த தேர்!’ ஊருக்காக நம்முடைய திராவிட மாடல் அரசு, ‘உருவாக்கிய தேர்!’ ’மக்களின் தேர்’ இது! தேசிய ஊடகங்களும், பிற மாநில அரசுகளும் கூட நம்முடைய இந்த திட்டமிடல், நிர்வாக நடைமுறையை வியந்து பார்க்கிறார்கள்” என இந்த திட்டத்தின் வெற்றிக்கான பின்னணியை விவரித்து முடித்தார்.