“கலைஞர் கார்ட்டூனும் வரைவார்!”
“பத்திரிக்கை சுதந்திரம் எப்போதெல்லாம் பாதிக்கப்பட்டதோ அப்போதெல்லாம் முதல் ஆளாக ஜனநாயக போராளியாக நின்று குரல் கொடுத்தவர் கலைஞர்” எனப் பத்திரிக்கையாளர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூரில் உள்ள வ.உ.சி. மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில், ‘இதழாளர் – கலைஞர்’ என்கிற தலைப்பில் சிறப்புப் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றுவருகிறது.
இந்தப் புகைப்பட கண்காட்சியில், பத்திரிக்கைத் துறையில் கலைஞர் ஆற்றிய மகத்தான பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் கலைஞரின் செய்தியாளர் சந்திப்பு, செய்தியாளர்களுடனான தனிப்பட்ட கலந்துரையாடல் போன்ற அரிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 150-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள இந்த கண்காட்சியை இளைய தலைமுறையினரும், பத்திரிக்கையாளர்களும் கண்டுகளிக்கவேண்டும் எனச் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய தி இந்து என்.ராம், ”பத்திரிக்கையாளர்களுக்குக் கலைஞரை மிகவும் பிடிக்கும். எப்போது வேண்டுமானாலும் அவரை அணுகி நேர்காணல் செய்யமுடியும். செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் அமைதியாக நிதானமாகப் பதில் சொல்வார். 1938 ஆம் ஆண்டு ‘மாணவ நேசன்’ என்கிற பத்திரிக்கையை தொடங்கினார்” என்று கூறினார்.
மேலும், “தினந்தோறும் எழுதுவதுதான் அவருக்கு யோகா. பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், சமூகநீதி இதுவே அவரின் சாராம்சம்” என்றும் புகழாரம் சூட்டினார்.
இதுகுறித்து பத்திரிக்கையாளர் கோவி லெனின், “கலைஞர் தன்னுடைய மாணவர் பருவத்திலிருந்து மரணிக்கின்ற காலம் வரை பத்திரிக்கையாளராகவே வாழ்ந்தார். அவருக்கு பல திறமைகள் உண்டு. எழுத்தாளராக, இலக்கியவாதியாக, கவிஞராக, திரைப்பட வசன கர்த்தாவாக, ஆட்சியாளராக, ஒரு கட்சியினுடைய அரை நூற்றாண்டு கால தலைவராக, இந்திய அரசியலை மாற்றியமைக்கக் கூடிய சக்தி வாய்ந்தவராக அவருக்குப் பன்முகங்கள் இருந்தாலும், எல்லா நேரத்திலும் ஒரு பத்திரிக்கையாளராகவே இருந்தார். கலைஞர் எழுதுவார் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவர் கார்ட்டூனும் வரைவார் என்று இன்றைய தலைமுறைக்குத் தெரியாது.
அவர் பத்திரிக்கையாளராக இருந்தார். பல பத்திரிக்கையாளர்களை உருவாக்கினார், பத்திரிக்கையாளர்களின் நலன்களுக்கான திட்டங்களை அவர் ஆட்சியில் கொடுத்தார். பத்திரிக்கை சுதந்திரம் எப்போதெல்லாம் பாதிக்கப்பட்டதோ முதல் ஆளாக ஜனநாயக போராளியாக நின்று குரல் கொடுத்தார்” என்று தெரிவித்தார்.