நாம் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையைப் பார்த்திருப்போம். எப்படி அழுத்தினாலும் திரும்பவும் எழுந்து உட்கார்ந்து கொள்ளும். அது ஒரு செய் நேர்த்தி. அதைப் போன்ற செய்நேர்த்தி உடைய மற்றொரு கலைப்படைப்பு தஞ்சாவூர் ஓவியம். இதைப் போல தமிழ்நாட்டுக்கே உரிய கலைப்படைப்புகள் பல்வேறு ஊர்களில் உள்ளன. அந்தக் கலைப்படைப்புகளை உருவாக்கும் பயிற்சியை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
கள்ளக்குறிச்சியில் மரவேலைப்பாடு பயிற்சியும், தஞ்சாவூரில் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் ஒவியப் பயிற்சியும், ராமநாதபுரத்தில் பனைஓலை கலைப் பொருட்கள் உருவாக்கும் பயிற்சியும், தூத்துக்குடியில் கடல் சிப்பிகளை வைத்து கலைப்படைப்புகளை உருவாக்கும் பயிற்சியும், மதுரையில் களிமண் மற்றும் காகித்தில் மட்பாண்டங்கள் செய்வது மற்றும் கைகாட்டுச் சாயம் உருவாக்கும் பயிற்சியும் திருநெல்வேலியில் பத்தமடைப்பாய் பின்னும் பயிற்சியும் வழங்கப்படுகின்றன. இந்தப் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு மாதா மாதம் உதவித் தொகையாக 12 ஆயிரத்து 500 ரூபாயும் பயிற்சிக்கான கருவிகளும் வழங்கப்படுகின்றன.
இந்த பயிற்சியில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனமும் வழங்கப்படுகிறது. கடந்த 1ம் தேதியன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அதே போல தலையாட்டி பொம்மை மற்றம் மரச் சிற்பங்கள் செய்யத் தேவையான கைவினைப் பெட்டகங்களையும் வழங்கினார். தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளைக் கற்பவர்களுக்கு பயிற்சியும் ஊக்கத் தொகையும் வேலை வாய்ப்பும் அளிப்பதோடு, ஆர்வமுள்ளவர்களை தொழில் முனைவோராக்க “நீயே உனக்கு ராஜா” என்ற திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். அந்தத் திட்டத்தின் படி தகுதி வாய்ந்த ஆர்முள்ள இளைஞர்களுக்கு 15 லட்ச ரூபாய் வரையில் பங்கு முதலீடு, அரசாங்க உதவியுடன் வங்கிக் கடன், மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.