கலெக்டரே உங்களைத் தேடி வருவாங்க… தமிழக அரசின் அசத்தல் திட்டம்!
மக்களுக்காக செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்கள், மக்களின் நலனையும் முன்னேற்றத்தையும் மையமாகக் கொண்டு தீட்டப்படுகின்றன, செயல்படுத்தப்படுகின்றன. அவற்றின் பலன் மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டியதும், அரசு நலத்திட்டங்களின் முழுப்பலனையும் மக்கள் அடைவதிலுள்ள இடர்ப்பாடுகளைக் களைய வேண்டியதும் அரசு இயந்திரத்தின் முதன்மையான பணி ஆகும்.
அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, தமிழ்நாட்டு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வருகிறது. மேலும், இந்த நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களைச் சென்றடைகிறதா இல்லையா என்பது குறித்து, அமைச்சர்கள் ஆய்வு செய்து துரித நடவடிக்கையும் எடுத்து வருவதை அவ்வப்போது செய்திகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த நிலையில் கிராமங்களில் உள்ள மக்கள், தங்கள் தேவைகளையும் அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவதற்காக அங்குள்ள அதிகாரிகளைத் தொடர்புகொண்டு மனு அளிக்கிறார்கள். சில அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கும், சில சான்றிதழ்கள் பெறுவதற்கும் மாவட்டத் தலைநகரங்களுக்கும் செல்ல வேண்டியிருப்பதால் பொதுமக்களுக்கு நேரம் மற்றும் பண விரயமாகிறது.
இதனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, பொதுமக்களின் இன்னல்களை போக்க “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு என்னென்ன நன்மை விளையும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்…
’உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்வர்.
அரசு இயந்திரம், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன், மக்களைத் தேடிச் சென்று பணியாற்ற வேண்டும். மக்களையும் அரசையும் இணைக்கும் பாலமாகச் செயல்பட்டு வருபவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள். ஒவ்வொரு கிராமத்தில் வசிக்கும் மக்களும் தங்கள் கிராம முன்னேற்றத்துக்கும், அரசு தொடர்பாக தனக்கிருக்கும் பிரச்னைகளுக்கும், தீர்வை நாடிச் செல்லும் நபர் மாவட்ட ஆட்சித் தலைவர்.
தங்கள் அருகில் இருக்கும் பிற அதிகாரிகள் அன்புக்குரியவராக இருப்பினும், மக்களின் மகத்தான அன்புக்கும், ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் உரியவர்களாக மாவட்ட ஆட்சியர்களைப் பார்க்கிறார்கள். மாவட்ட ஆட்சியர்களிடம் திங்கட்கிழமை தோறும் வந்து மனு அளிக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் பதவியின் கம்பீரம் மக்களைக் கலவரம் அடையச் செய்வதில்லை, மாறாக கவர்ந்திழுக்கிறது.
அந்த ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்வர்.
இந்தத் திட்டம், ‘களத்தில் முதல்வர்’ திட்டத்தின் அடுத்தகட்டம் எனலாம். ‘மக்களிடம் செல்…’ என்று சொன்ன அண்ணாவின் கனவுத்திட்டம் என்றும் சொல்லலாம். உங்களை நாடி, உங்களை குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் வருகிறது. தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்தால் குக்கிராமங்களில் உள்ள மக்களும் பயன் அடைவார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை….