கருணாநிதிக்கும் விளையாட்டுக்கும் என்ன தொடர்பு? உதயநிதி சுவாரஸ்யமான விளக்கம்!
விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கும் திட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டத்திற்கு ‘கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அந்தத் திட்டத்திற்கு ஏன் கலைஞர் பெயரை வைக்க வேண்டும்? அவருக்கும் விளையாட்டுக்கும் என்ன தொடர்பு என்று வழக்கமான கேள்விகள் எழலாம்.
அதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுவராஸ்யமான ஒரு பதிலைச் சொல்லி இருக்கிறார். கோவையில், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், விளையாட்டு உபகரணங்களை வழங்கி உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அப்போது, “இந்தியாவில் விளையாட்டுத் துறை என்றால் அதற்குத் தமிழ்நாடு தான் என்ற வகையில், தொடர்ந்து புதுப்புது முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். அதில் மிகமிக முக்கியமானதுதான் இந்த கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டம்.
விளையாட்டுக்கும் கலைஞருக்கும் என்ன தொடர்பு? இந்தத் திட்டத்திற்கு ஏன் அவருடைய பெயரை வைக்க வேண்டும் என்று கேள்வி எழலாம்” என்று கூறிய உதயநிதி, அதற்கு ஒரு மிக நீண்ட பதிலையும் அளித்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
“கலைஞர் ஒரு ஆர்வமிக்க விளையாட்டு வீரர். கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் சரி, தடகளப் போட்டி, ஒலிம்பிக் போட்டி, கால்பந்து போட்டியாக இருந்தாலும் சரி, அனைத்து போட்டிகளையும் நெருக்கடியான நேரத்திலும் தொலைகாட்சியில் பார்த்து ரசிப்பவர். ஒரு விளையாட்டு வீரருக்கு இருக்க வேண்டிய அத்தனை குணங்களும், திறமைகளும் கலைஞரிடம் இருந்தது.
ஒரு விளையாட்டு வீரருக்கு என்னென்ன திறமைகள் வேண்டும். நல்ல எனர்ஜி வேண்டும். நல்ல கூர்மையான அறிவுத்திறன் வேண்டும். தோல்வியிலும் துவண்டு விடாத மன திடம் வேண்டும். கலைஞருடைய எனர்ஜிக்கு நிகரான எனர்ஜியை நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. கலைஞருக்கு உள்ள எனர்ஜி ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் இருக்க வேண்டும்.
‘தான் என்ன செய்ய போகிறோம். அதற்கு பதிலாக எதிரில் இருப்பவர் என்ன சொல்லப் போகிறார்கள். அதற்கு என்ன பதில் சொல்லலாம்..?’ என்று முன்கூட்டியே யோசித்து செயல்பட கூடியவர் கலைஞர். ஒரு விளையாட்டு வீரருக்கும் அந்த திறமை தேவை. நாம் இப்படி விளையாடினால், நம்முடைய எதிர் அணியினர் எப்படி விளையாடுவார் என்று கணிக்க வேண்டும்.
அடுத்து தோல்வியாக இருந்தாலும் சரி, வெற்றியாக இருந்தாலும் சரி, இரண்டையுமே சமமாக பார்க்கக் கூடியவர் கலைஞர். தோல்வி அடைந்து விட்டோம் என்று துவண்டு விடக்கூடாது. வெற்றி பெற்று விட்டோம் என்று அகங்காரத்தோடு இருக்கக் கூடாது என்பதைக் கடைப்பிடித்தவர் அவர்.
தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருந்தால், வெற்றி நிச்சயமாக நம்மை தேடி வரும் என்ற மனதிடத்துடன், கடைசி வரை கலைஞர் உழைத்துக் கொண்டிருந்தார். அதே போன்ற மன உறுதி, ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் இருக்க வேண்டும்.
கலைஞர் மாதிரி டீம் வொர்க் செய்த இன்னொரு நபரை இந்த உலகத்தில் பார்க்க முடியாது. அந்த டீமை கலைஞர் நேர்த்தியாக வழிநடத்திக் கொண்டிருந்தார்.
அதே போன்று விளையாட்டிலும் நல்ல டீமை நீங்கள் உருவாக்கி கொள்ள வேண்டும். நல்ல டீம் அமைந்தாலே பாதி வெற்றி பெற்று விட்டோம் என்று அர்த்தம். இப்படி ஒரு திறமையான விளையாட்டு வீரருக்கு இருக்கக்கூடிய அனைத்து திறமைகளும் கலைஞரிடம் இருந்தது. அதனால் தான் யாராலும் எப்போதும் வீழ்த்த முடியாத அரசியல் வீரராக, விளையாட்டு வீரராக கலைஞர் இந்தியாவில் உயர்ந்து நின்று கொண்டிருந்தார்” என்று கூறினார் உதயநிதி ஸ்டாலின்.