Amazing Tamilnadu – Tamil News Updates

கடுப்பு காட்டிய நீதிமன்றம்… யூடியூபர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து!

சென்னை உயர் நீதிமன்றத்தின் கடுமையான நிலைப்பாட்டைத் தொடர்ந்து, டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்து ஏற்படுத்தி தனக்குத்தானே காயம் ஏற்படுத்தி கொண்ட வழக்கில் பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கடந்த மாதம் 19-ம் தேதி பாலுச்செட்டி சத்திரம் போலீசார் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, காஞ்சீபுரம் நீதித்துத்றை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வாசன், நீதிபதி உத்தரவின் பேரில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த 4-ம் தேதியுடன் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஜாமீன் கோரி டிடிஎப் வாசன் தாக்கல் செய்த மனுவை காஞ்சீபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பலமுறை நிராகரித்தது. இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டிடிஎப் வாசன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, இதுபோன்ற செயலில் ஈடுபடும் டிடிஎப் வாசனின் யூடியூப் சேனலை மூடிவிட வேண்டும் என்றும், அவரது பைக்கை எரித்து விடலாம் என்றும் காட்டமாக கூறி, டிடிஎப் வாசனின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், 2033 அக்டோபர் மாதம் வரை டிடிஎப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவித்துள்ளார்.

Exit mobile version