கடமங்கலத்தில் சங்க காலக் கண்ணாடி மணிகள்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கிறது கடமங்கலம் கிராம். இங்கு சங்க காலத் தமிழர்களின் கலைத் திறனை வெளிப்படுத்தும் கண்ணாடி மணிகள் கிடைத்துள்ளன. சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் அதைக் கண்டுபிடித்துள்ளனர்.
இத்தகைய கண்ணாடி மணிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் பண்டைய தொண்டை மண்டலத்தில் இருந்ததாக அதாவது, வட தமிழ்நாட்டில் இருந்ததாக இதுவரையில் குறிப்பிடத் தக்க ஆதாரம் எதுவும் கிடைத்ததில்லை என்கிறார்கள் தொல்லியல் அறிஞர்கள்.
ஆனால், தற்போது சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய தொல் பொருள் ஆய்வில், நூற்றுக்கணக்கான கண்ணாடி மணிகள் கிடைத்துள்ளன. அது மட்டுமல்லாமல் கண்ணாடி உருக்கும் ஐந்து உலைகளும் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் நான்கு உலைகள் அழிந்த நிலையிலும், ஒன்று சிறிதளவு சேதமடைந்த நிலையிலும் இருந்ததாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் தலைவர் சௌந்தர ராஜன் கூறினார்.
அந்த கண்ணாடி உருக்கும் உலைகள் இரண்டு அடுக்குகளைக் கொண்டதாக இருந்தன. உலைகளைச் சுற்றி பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அந்த ஓடுகளிலும் கண்ணாடிப் பூச்சுகள் காணப்பட்டன.
இதைப் பற்றி சென்னைப் பல்கலைக்கழக பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சிப் பொறுப்பாளர் ஜினு கோஷி, இந்த மணிகளை ரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தினால், இவை அந்தக் காலத்தில் இருந்த அரிக்கமேடு போன்ற பிற நகரங்களுக்கு வழங்கப்பட்டதா என்பதை அறிய முடியும் என்று கூறினார்.
கடமங்கலத்தில் மூன்று இடங்களில் இத்தகைய மணிகள் கிடைத்துள்ளன. அவை குழாய் வடிவம், வட்ட வடிவம் மற்றும் உருளை வடிவத்தில் சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் ஆகிய வண்ணங்களில் இருந்தன. இங்கு கிடைத்த ஒரு சில மணிகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கிடைத்த கண்ணாடி மணிகளைப் போல இருப்பதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து தொடர் ஆய்வுகள் நடத்தினால் அவற்றின் காலம் குறித்து துல்லியமாக அறிந்து கொள்ளலாம் எனவும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.