ஜுன் 1 முதல் ஆர்டிஓ அலுவலகம் செல்லாமலேயே ஓட்டுநர் உரிமம்!
இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் என எந்தவித வாகனங்களையும் தனியார் ஓட்டுநர் பயிற்சி மையம் மூலம் நன்றாக ஓட்டுக் கற்றுக்கொண்டாலும், ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்கு ஆர்டிஓ (RTO )எனப்படும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குச் சென்று, அவர்கள் வைக்கும் ஓட்டுநர் சோதனையில் பங்கேற்க வேண்டும்.
விதிமுறையில் மாற்றம்
இந்த நிலையில், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விதிகளை மத்திய அரசு தற்போது மாற்றியுள்ளது. புதிய விதிகளின்படி, தனியார் நிறுவனங்களுக்கும் ஓட்டுநர் சோதனை நடத்தவும், ஓட்டுநர் சான்றிதழ் வழங்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை, வருகிற ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பயிற்சி மையங்களுக்கான விதிகள்
இதன்படி தனியார் பயிற்சி மையங்கள் மூலமே ஓட்டுநர் சான்றிதழ் பெறலாம். அதே சமயம், ஓட்டுநர் பயிற்சி உரிமம் வழங்கும் தனியார் ஓட்டுநர் பயிற்சி மையத்திற்கு குறைந்த பட்சம் 1 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். 4 சக்கர வாகனங்களுக்கு, ஓட்டுநர் மையத்தில் கூடுதலாக 2 ஏக்கர் நிலம் தேவைப்படும். தனியார் ஓட்டு நர் பயிற்சி மையத்தில் உரிய சோதனை வசதிகள் இருக்க வேண்டும். பயிற்சியாளர்கள் குறைந்தபட்சம் உயர்நிலைப் பள்ளி அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். இதைத் தவிர பயிற்சியாளர்களுக்கும் விதிமுறைகளும் கால அளவும் வரையறுக்கப்பட்டு உள்ளன.
விண்ணப்பிப்பது எப்படி?
https://parivahan.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று முகப்புப் பக்கத்தில் உள்ள டிரைவிங் லைசென்ஸ் அப்ளை ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண் டும். விண்ணப்ப படிவம் திறக்கும். தேவைப்பட்டால் பிரின்ட் அவுட் எடுத்துக்கொள்ளலாம். அதில், கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்ப வேண்டும். படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும். பின்னர், தெரிவிக்கப்பட்டுள்ள வழி முறைகளின்படி மீண்டும் நிரப்ப வேண்டும். அவரவர் விருப்பத்தைப் பொறுத்து ஆன் லைனிலோ அல்லது ஆஃப் லைனிலோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப செயல்முறையை முடித்த பிறகு, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கும், ஓட்டுநர் திறமைக்கான ஆதாரத்தை வழங்குவதற்கும் ஆர்டிஓ அலுவலகத்தை அணுக வேண்டும். அனைத்து படிவங்களையும் சமர்ப்பித்த பிறகு, ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.
லைசன்ஸ் கட்டணம் எவ்வளவு?
கற்றல் உரிமம் (LLR) : ரூ.200
கற்றல் உரிமம் புதுப்பித்தல் (LLR Renewal): ரூ.200
சர்வதேச உரிமம் : ரூ.1000
நிரந்தர உரிமம் : ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.