நாடாளுமன்றத்திற்கும் இந்தியா முழுவதிலுமுள்ள அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் ஒன்றிய அரசு தீவிரமாக இருக்கிறது. இது தொடர்பாக ஒன்றிய அரசு அமைத்துள்ள உயர்நிலைக்குழு அனைத்து தரப்பினரிமும் கருத்துக் கேட்டு வருகிறது.
இந்நிலையில் உயர்நிலைக்குழுவிற்கு திமுக ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் இந்தத் திட்டம் நடைமுறை சாத்தியமற்றது என திமுக குறிப்பிட்டுள்ளது. திமுகவின் வாதங்களை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
முதலில் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாகத்தான் கருத்துக் கேட்டார்கள். இப்போது நகராட்சி, ஊராட்சிகளுக்கும் சேர்த்துத் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆய்வு செய்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது மாநில அதிகார வரம்புக்கு உட்பட்டது. அதில் ஒன்றிய அரசு தலையிடுவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.
கருத்துக் கேட்க அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவே சட்டவிரோதமானது.
ஒரே நேரத்தில் தேர்தல் வந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை அதன் காலம் முடிவதற்குள்ளாகவே கலைக்க நேரிடும். இது அரசியல் சட்டவிரோதம்.
ஒன்றிய ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்து ஆட்சி கவிழ்ந்தால், அப்போது ஒரே தேர்தல் நடத்துவது நடைமுறை சாத்தியமற்றது.
ஒரே நேரத்தில் தேர்தலை எதிர்கொள்ள தேர்தல் ஆணையர் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு எல்லாவற்றையும் இப்போது இருப்பது போல் 10 மடங்கு உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும். தேர்தல் அதிகாரிகளின் எண்ணிக்கை இப்போது இருப்பதை விட 3 முதல் 5 மடங்கு அதிகரிக்க வேண்டும். இது கட்டுக்கடங்காத செலவினத்தை ஏற்படுத்தும். இது நடைமுறை சாத்தியமற்றது.
ஒரே நேரத்தில் நகராட்சி, பஞ்சாயத்து, சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திடம் போதிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லை. இதற்கு பல லட்சம் கோடி ரூபாயை செலவிட வேண்டிய நிதி சுமை தேர்தல் ஆணையத்திற்கு ஏற்படும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு இப்படி தனது எதிர்ப்பைப் பட்டியலிட்டுள்ள திமுக. இது தொடர்பாக ஒன்றிய அரசின் உயர்மட்டக்குழு தனது விசாரணையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அப்படி இல்லாவிட்டால் சட்ட அடிப்படையில் நடவடிக்கையை எடுக்க வேண்டி வரும் என்று கூறியுள்ளது.