‘மத அரசியலா… மனித அரசியலா?’ என ஒருகை பார்த்து விடுவோம் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மாநாட்டை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “மாநாடு முடிந்து விட்டது. சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று இளைஞர் அணி தோழர்கள் எண்ணி விட வேண்டாம்.
நாடாளுமன்றத் தேர்தல் மிக அருகில் வந்து விட்டது. இதுவரை உழைத்து விட்டு இனி ஓய்வெடுத்தால் அது முயல் – ஆமை கதையாய் முடிந்து விடும். உங்களின் சுறுசுறுப்பை நீங்கள் மேலும் கூட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
“மத அரசியலா? மனித அரசியலா? மனு நீதியா? சமூக நீதியா?
மாநில உரிமையா? பாசிச அடக்குமுறையா? என ஒருகை பார்த்து விடுவோம்” என்று கூறியிருக்கிறார்.
மாநாட்டில், ‘நாடும் நமதே நாற்பதும் நமதே’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதை குறிப்பிட்டிருக்கும் உதயநிதி, “மாநாட்டின் வெற்றி மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கட்டும்” எனக் கூறியுள்ளார்.