சுற்றுலாத் துறையில் அசத்தும் தமிழ்நாடு… ரூ. 20,000 கோடி முதலீட்டு ஈர்ப்புக்கு திட்டம்!
தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறை மிகச் சிறப்பாக வளர்ந்து வருகிறது. வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளில் 17ல் இருந்து 21 சதவீதம் வரையில் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர்.
2022 கணக்கீட்டின்படி, உள்நாட்டுச் சுற்றுலாவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருந்தது.
கடலோரச் சுற்றுலா, பண்பாட்டுச் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா, ஆன்மீகச் சுற்றுலா என பலவகையான சுற்றுலாக்கள் உள்ளன. இவை தவிர மாநாடுகள், கண்காட்சிகளைக் காணச் செல்லும் சுற்றுலாக்கள் உள்ளன. இத்தகைய சுற்றுலாத்துறையில் மூலதனத்தை ஈர்க்க தமிழ்நாடு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மருத்துவச் சுற்றுலா அதிக வருமானம் ஈட்டக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள பன்னோக்கு மருத்துவமனை, உயர் சிறப்பு மருத்துவமனைகளில், 15 லட்சம் பேர் மருத்துவப் பரிசோதனைக்காகவும் சிகிச்சைக்காகவும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை, வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும்.
பொதுவாக கென்யா, நைஜீரியா, தான்சானியா, ஈராக், ஆப்கன், ஓமன், மாலத்தீவு மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவம் பார்க்க சிறந்த இடம் தமிழ்நாடு என்று முடிவு செய்து, இங்கு வருகின்றனர். பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
2014 மற்றும் 2020க்கு இடைப்பட்ட காலகட்டத்தில், வெளிநாட்டவர் சிகிச்சை பெறும் மாநிலங்களில் ஐந்து முறை முதல் இடத்தை பெற்ற மாநிலம் தமிழ்நாடு. இரண்டு முறை இரண்டாவது இடத்தைப் பெற்றது.
இந்த நிலையில், மருத்துவச் சுற்றுலாவில் 2026ல் 13 பில்லியன் டாலர் வருமானம் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய அளவில் மருத்துவச் சுற்றுலா மூலம் ஈட்டக் கூடிய வருவாயில் 40 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து ஈட்டக் கூடியதாக இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் மட்டுமல்லாமல் அனைத்து விதமான சுற்றுலாத்துறைகளையும் வளர்ப்பதற்காகவும், அவற்றில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துகிறது. முதலீட்டாளர்களுக்கு சலுகைகளை அறிவிக்கிறது. எளிதில் தொழில் நடத்தும் வகையில் விதிமுறைகளை எளிதாக்குகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் சுற்றுலாத்துறையில் 20 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்ப்பதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் தமிழ்நாட்டில் தயாராக இருக்கின்றன.
சுற்றுலாத்துறையில் தமிழ்நாடு அரசு வைத்துள்ள இலக்கை எட்டி விட்டால், அது ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை எட்டுவதும் சுலபம்.