ஏற்றுமதித் தொழிலில் இறங்க விரும்புகிறவர்களுக்கென தமிழ்நாடு அரசு பயிற்சி வகுப்பு நடத்த இருக்கிறது.
நீங்கள் தொழில்முனைவோரா? நீங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்று கருதுகிறீர்களா? அல்லது வெளிநாடுகளில் தேவைப்படும் பொருட்களை இங்கு கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்யலாம் என நினைக்கிறீர்களா? ஆனால் எப்படி ஏற்றுமதி செய்வது அதற்கான விதிமுறைகள் என்ன என்று உங்களுக்குத் தெரியவில்லையா? கவலையே வேண்டாம். உங்களைப் போன்ற ஆட்களுக்கு தமிழ்நாடு அரசு பயிற்சி வகுப்பு நடத்துகிறது.
சென்னை, ஈக்காட்டுத் தாங்கல் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில், வருகிற 31 ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி 2 வரை இந்தப் பயிற்சி நடக்கிறது. இதில், ஏற்றுமதி சந்தையில் எந்தெந்தப் பொருட்களுக்குத் தேவை இருக்கிறது? அந்தப் பொருட்களை எந்த நிறுவனங்களில் கொள்முதல் செய்யலாம்? ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான சட்டதிட்டங்களும் விதிமுறைகளும் என்னென்ன? இந்தத் துறையில் அரசு என்னென்ன உதவிகளைச் செய்கிறது? அவற்றை எப்படிப் பெறலாம்? நாம் விற்பனை செய்யும் பொருட்களுக்கான பணத்தை வங்கிகள் மூலம் பெற வேண்டுமெனில் அதற்கான வழிமுறைகள் என்ன? என ஏற்றுமதி தொடர்பான உங்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் அந்த மூன்று நாள் பயிற்சியில் விடை கிடைக்கும்.
பயிற்சியில் சேர விரும்புகிறவர்கள், ஈக்காட்டுத் தாங்கலில் உள்ள தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.editn.in என்ற வலைத்தளத்தில் விபரங்களைப் பெறலாம்.