பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்றுமதியும் இறக்குமதியும் முக்கியமானது. தன்னிடம் இல்லாத பொருட்களை இறக்குமதி செய்வதும், தன்னிடம் உள்ள பிற நாடுகளுக்குத் தேவையான பொருட்களை ஏற்றுமதி செய்வதும்தான் உலக நாடுகளின் வழக்கம்.
எந்த நாடு அதிக இறக்குமதியையும் குறைந்த அளவு ஏற்றுமதியையும் கொண்டிருக்கிறதோ அந்த நாடு பொருளாதார ரீதியில் பின்தங்கி இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். அதையே தலைகீழாகப் பார்த்தால் எந்த நாடு அதிகமான அளவில் ஏற்றுமதியைச் செய்கிறதோ அந்த நாடு பொருளாதார ரீதியில் உயர்ந்த இடத்தில் இருக்கிறது என்று அர்த்தம். உதாரணமாக சீனாவின் பொருட்கள் அதிகமான அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆவதால், அந்த நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த இடத்தில் இருக்கிறது.
அப்படி ஒரு இடத்தைத்தான் தமிழ்நாடு கொஞ்சம் கொஞ்சமாய் எட்டிப் பிடித்து வருகிறது. பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது தமிழ்நாடு. இதற்கு முன்பு அந்த இடத்தை உத்தரப்பிரதேசம் வைத்திருந்தது. சென்ற நிதியாண்டில் தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியான பொறியியல் பொருட்களின் மதிப்பு 1 கோடியே 42 லட்சம் கோடி. அதன் அடிப்படையில்தான் தமிழ்நாட்டுக்கு இரண்டாவது இடம் கிடைத்திருக்கிறது.
அதே போல் தோல்பதனிடும் தொழில் தோல் காலணி தயாரிக்கும் தொழிலிலும் தமிழ்நாடு முக்கியமான இடத்தில் இருக்கிறது. இந்தியா முழுவதும் இந்தத் துறையின் உற்பத்தியில் 38 சதவீத உற்பத்தி தமிழ்நாட்டில்தான் நடக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் தோல் பொருட்களின் மதிப்பு சுமார் 76 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்தியா முழுவதிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏற்றுமதியாகும் தோல் பொருட்களில் 42 சதவீதம் தமிழ்நாட்டில் மட்டும் இருந்து ஏற்றுமதியாகிறது.
அதே போல் மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 22.8 சதவீதமாக சென்ற நிதியாண்டில் உயர்ந்திருக்கிறது. அதனால் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்று பாய்ச்சல் காட்டி வருகிறது. இதே நிலை இதர ஏற்றுமதியிலும் தொடருமானால், ‘ஏற்றுமதியில் நம்பர் 1 இடத்தை தமிழ்நாடு பெற வேண்டும்’ என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் லட்சியம் நிச்சயம் நிறைவேறலாம்!