ஏடிஎம் மூலம் அதிக பணம் எடுக்கும் தமிழ்நாடு!
இந்தியாவில் யுபிஐ பணப் பரிவர்த்தனைகள் ( Unified Payments Interface -UPI) அதிகரித்து வருகிறபோதிலும், ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதும் மக்களிடையே அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
ஏடிஎம் மூலமாக பணம் எடுப்பது 2023 ஆம் நிதியாண்டில் 1.35 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2024 ஆம் நிதியாண்டில் 1.43 கோடியாக உயர்ந்துள்ளது. மக்கள் தங்களது பரிவர்த்தனைக்கு பணத்தையே அதிகமாக செலவழிக்கிறார்கள் என்பதையே இது குறிக்கிறது. அதே சமயம் ஒட்டுமொத்த நுகர்வு அதிகரித்ததற்கான அறிகுறியாகவும் இது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
மெட்ரோ நகரங்களில் அதிகம்
ஏடிஎம் மூலமாக பணம் எடுப்பதை மாதாந்திர அடிப்படையில், 2023 ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, 2024 ஆம் நிதியாண்டில் 2023 ஆம் நிதியாண்டின் மாத சராசரியான 7.23 சதவீதத்தை விட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
2024 ஆம் நிதியாண்டில், ஏடிஎம் மூலமாக பணம் எடுப்பது மெட்ரோ நகரங்களில் 10.37% அதிகரித்துள்ளது. அதைத் தொடர்ந்து அரைநிலை நகர்ப்புறங்களில் 3.94 சதவீதமும், கிராமப்புறங்களில் 3.94 சதவீதமும், அரைநிலை மெட்ரோ நகரங்களில் 3.73 சதவீதமும் அதிகரித்துள்ளதாக CMS இன்ஃபோ சிஸ்டம்ஸ் என்ற முன்னணி வணிக சேவை நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
அதிக பணம் எடுக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு
2024 ஆம் நிதியாண்டின் போது, இந்தியாவில் ஏடிஎம் மூலம் பணம் எடுப்பது அதிகமாக காணப்பட்டவை என்றால் வட மாநிலங்களில் டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசமும், தென் மாநிலங்களில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவும், கிழக்கு மாநிலங்களில் மேற்குவங்கமும் இடம் பிடித்துள்ளன.
ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதில் டாப் 5 இடங்கள்
பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை, 49 சதவீத ஏடிஎம்-கள் பெருநகரங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் அமைந்துள்ளன, அதே நேரத்தில் 51% ஏடிஎம்-கள் அரைநிலை மெட்ரோ நகரங்களில் அமைந்துள்ளன. அதேபோன்று தனியார் துறை வங்கிகளைப் பொறுத்தவரை, 64% ஏடிஎம்-கள் பெருநகரங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் அமைந்துள்ளன. அதே சமயம் 36% ஏடிஎம்-கள், நுகர்வு செலவினங்களை இடையூறு இல்லாமல் செய்ய ஏதுவாக அரைநிலை நகர்ப்புறங்களில் அமைந்துள்ளன.
ஒரு ஏடிஎம்-மில் பணம் எடுப்பதில், கர்நாடகா 2024 ஆம் நிதியாண்டில் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.83 கோடியும், டெல்லி மற்றும் மேற்கு வங்கம் முறையே ரூ.1.82 கோடி மற்றும் ரூ.1.62 கோடியும் எடுத்துள்ளன.
2024 ஆம் நிதியாண்டில், 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 14 ல் ஏடிஎம் மூலம் பணம் எடுப்பது 6.45 சதவீத ஆண்டு வளர்ச்சியை எட்டி உள்ளது. அதே சமயம் 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சராசரியாக 4.14% ஆண்டு சரிவைக் கண்டுள்ளன.