ஏப்ரல் 1 முதல் எஸ்பிஐ வங்கியின் டெபிட் கார்டு கட்டண உயர்வு!
நாட்டின் முன்னணி பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI),டெபிட் கார்டுகளுக்கான வருடாந்திர பராமரிப்புக் கட்டணத்தை உயர்த்தி உள்ள நிலையில், இந்த கட்டண உயர்வு வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
கட்டண கட்டமைப்பை ஒழுங்குபடுத்துவதையும், வாடிக்கையாளர்களுக்கான தரமான சேவையைத் தொடருவதையும் உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
கட்டண உயர்வு எவ்வளவு?
தேர்ந்தெடுக்கப்பட்ட டெபிட் கார்டுகளுக்கான வருடாந்திர பராமரிப்புக் கட்டணம் முன்பை விட இப்போது ரூபாய் 75 அதிகமாக இருக்கும் என்று அவ்வங்கி அறிவித்துள்ளது. அதன்படி இனி கிளாசிக், சில்வர், குளோபல் மற்றும் காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டுகள் மற்றும் யுவா, கோல்ட், காம்போ டெபிட் கார்டுகள், மை கார்டு மற்றும் பிளாட்டினம் டெபிட் கார்டு போன்றவற்றுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கிளாசிக் கார்டுகள்
கிளாசிக், சில்வர், குளோபல், காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டுக்கு முன்னர் ரூ.125 + ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டது. இனி அது ரூ. 200 + ஜிஎஸ்டி-யாக இருக்கும்.
கோல்டு கார்டு
யுவா, கோல்டு, காம்போ டெபிட் கார்டு மற்றும் மைஜிஎஸ்டி கார்டு போன்ற கார்டுகளுக்கு முன்னர் ரூ. 175 + ஜிஎஸ்டி ஆக இருந்தது. இனி அது ரூ. 250 + ஜிஎஸ்டி-யாக இருக்கும்.
பிளாட்டினம் டெபிட் கார்டு
இதேபோல், பிளாட்டினம் டெபிட் கார்டுக்கு, முன்பு ரூ. 250 + ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்ட நிலையில், இனி ரூ. 325 + ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
பிரீமியம் பிசினஸ் டெபிட் கார்டு
மேலும் ப்ரைட் அல்லது பிரீமியம் பிசினஸ் டெபிட் கார்டுக்கு ஆண்டு பராமரிப்பு கட்டணம் ரூ. 425 + ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். முன்னர் இது ரூ. 350 + ஜிஎஸ்டி-யாக இருந்தது.
ஏற்கெனவே மினிமம் பேலன்ஸ் குறைந்தால் அபராதம், மாதத்தில் 5 முறைக்கு மேல் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தினால் அதற்கு கட்டணம்… என பல்வேறு விதங்களில் வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் கறக்கப்படும் நிலையில்,டெபிட் கார்டுகளுக்கான தற்போதைய வருடாந்திர பராமரிப்புக் கட்டண உயர்வு, 40 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.