Amazing Tamilnadu – Tamil News Updates

‘எழில்மிகு கோவை’, ‘மா- மதுரை’ … கோவை, மதுரைக்கு மேலும் பிரகாசமான வளர்ச்சி!

மிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, கோவை, மதுரை ஆகிய நகரங்களை முறையே ‘எழில்மிகு கோவை’, ‘மா- மதுரை’ நகரங்களாக மாற்றுவதற்கான விரிவான வளர்ச்சித் திட்ட அறிக்கைகளை (CDP) தயாரிப்பதற்காக, அத்துறை சார்ந்த நிபுணர்களுக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அழைப்பு விடுத்துள்ளது.

“சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரங்களாக உள்ள கோவை, மதுரை மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கி அனைத்து மக்களின் பங்களிப்புடன் ‘எழில்மிகு கோவை’, ‘மா-மதுரை’ என்ற ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டங்கள் தயாரிக்கப்படும். பசுமையான பூங்காக்கள், தூய்மையான தெருக்கள், அனைவருக்கும் சுத்தமான குடிநீர், பாதுகாப்பான போக்குவரத்து அமைப்புகள், தொழில் பூங்காக்கள், தரமான வீட்டு வசதி போன்றவை இத்திட்டத்தில் இடம்பெறும். தலா ரூ.1 கோடி செலவில் இத்திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்படும்” என்று கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எந்தவொரு திட்டம் அல்லது குறிப்பிட்ட நிதியுதவி முன்மொழிவுகளுக்கும் ஒப்புதல் அளிப்பதற்கு முன்பாக, அது தொடர்பான விரிவான வளர்ச்சித் திட்ட அறிக்கைகளை (CDP) தயாரிப்பது மிக அவசியமானது. ஒரு நகரத்தின் அனைத்து மட்டத்திலான வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, வீட்டுவசதி, போக்குவரத்து மற்றும் போக்குவரத்து இணைப்பு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டு இந்த அறிக்கைகள் தயார் செய்யப்படும்.

அந்த வகையில், மேற்கூறிய வளர்ச்சித் திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்காக அழைக்கப்பட்டுள்ள நிபுணர்கள், திட்டமிடலுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதிக்கான மேம்பாடு தொடர்பான தெளிவான யோசனையையும், நிர்ணயிக்கப்பட்ட நோக்கங்களை அடைவதற்கான நீண்டகால உத்திகள் மற்றும் கொள்கைகளையும் உள்ளடக்கிய ஆவணங்களை அளிப்பார்கள்.

1,531.57 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கோயம்புத்தூர் நகர திட்டமிடல் பகுதியாக அறிவிக்க ஏதுவாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை ஏற்கனவே அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதில் 1 மாநகராட்சி, 4 நகராட்சிகள், 21 நகர பஞ்சாயத்துகள் மற்றும் 66 கிராம பஞ்சாயத்துகள் அடங்கும். அதேபோல், 1 மாநகராட்சி, 2 நகராட்சிகள் மற்றும் 3 டவுன் பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய 1,254.93 சதுர கி.மீ பகுதி, மதுரை நகர திட்டமிடல் பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற வளர்ச்சியின் ஒரு முக்கிய அங்கம் என்னவென்றால், அது தரமான வீடுகள் தான். இது முன்மொழிவுக்கான கோரிக்கையில் ( Request for Proposal -RFP)மிக முக்கியமாக இடம்பெற்றுள்ளது. மலிவு விலையில், அர்ப்பணிப்பு உணர்வுடன் நல்ல வடிவமைப்புடன் கட்டப்படும் வீடுகள், அந்த நகரில் மக்கள் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் ஏற்ற இடமாக மாற்றுகிறது.

அந்த வகையில், தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மேற்கொள்ளும் இந்த மாற்றம் என்பது நகரின் உட்கட்டமைப்பை மட்டுமல்லாது, செழிப்பான சமூகங்களையும் உருவாக்கும் என்பதை உறுதி செய்கிறது எனலாம். கோவையை எழில்மிகு கோவையாகவும், மதுரையை மா-மதுரையாகவும் மாற்றுவது நிலையான நகர்ப்புற வளர்ச்சியின் வெற்றியாகும். பசுமையான இடங்கள், பாதுகாப்பான நடமாட்டம், தொழில்துறை வளர்ச்சி மற்றும் தரமான வீடுகள் ஆகிய அம்சங்களுடன் உருவாக்கப்படும் இந்த நகரங்களுக்கு, நிச்சயம் மேலும் பிரகாசமான எதிர்காலம் நிச்சயம் உள்ளது எனலாம்!

Exit mobile version