உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதனால் அதிக அளவில் முதலீடுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு, பல்வேறு நாடுகளில் இருந்து 450 பிரதிநிதிகள் சென்னை நோக்கி வரத் தொடங்கி உள்ளனர். பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர் சிமோன் வோங், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க ஆவலாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 5 பில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் தூதர் சிமோன் வோங்
புதிதாகத் தொழில் தொடங்குவது தவிர, ஏற்கனவே இங்குள்ள பன்னாட்டு நிறுவனங்கள், தங்களின் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கு தேவையான முதலீடுகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளன.
‘காப்லின் பாய்ட் லேபரட்டரி லிமிட்டட்’ எனும் மருந்து உற்பத்தி நிறுவனம், தமிழ்நாட்டில் தனது உற்பத்தியை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, 700 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அந்நிறுவனம் கையெழுத்திட இருக்கிறது.
புற்று நோய்க்கான மருந்துகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை காப்லின் நிறுவனம், ஏற்கனவே காக்கலூரில் நடத்தி வருகிறது. அங்கு உற்பத்தியாகும் புற்றுநோய் மருந்துகள் அமெரிக்கா, ஐரேப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. அதே போல் சென்னை அருகே, தேர்வாய் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தியாகும் மருந்துப் பொருட்கள் மெக்சிகோ, பிரேசில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
தற்போது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி, அந்நிறுவனம் தனது உற்பத்தியை விரிவாக்கவும் அதற்கென புதிதாக முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது. பெருங்குடி மற்றும் செங்கல்பட்டில் மகிந்திரா வேர்ல்ட் சிட்டி ஆகிய இடங்களில் ஆய்வு மற்றும் மேம்பாடு நிறுவனம் ஒன்றையும் காப்லின் நடத்தி வருகிறது. அதையும் விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், புதிதாக 1000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அந்நிறுவனத் தலைவர் சி.சி.பார்த்திபன் தெரிவிக்கிறார்.
இதே போல் சிங்கப்பூரின் ‘செம்ப்கார்ப் நிறுவனம்’, பசுமை ஹைட்ரஜன் திட்டங்களில் முதலீடு செய்ய இருக்கிறது. இது தவிர ஹூண்டாய் மோட்டார் இந்தியா, யூபிஎஸ், குவால்காம், மாயெர்ஸ்க் ஆகிய நிறுவனங்களும் இந்த மாநாட்டின்போது, தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள இருக்கின்றன.
டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் புதிய திட்டங்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள இருக்கிறது. அதே போல் டேட்டா சென்டர் மற்றும் புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்களில் அதானி குழுமம் புதிய முதலீடுகளை செய்ய இருக்கிறது.
மேலும், தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியைக் கொண்டு வரவும் இந்த மாநாட்டில் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம், தூத்துகுடியில் மின்வாகன உற்பத்தித் தொழிற்சாலையைத் தொடங்க இருக்கிறது.
மின்வாகனங்கள்
இதன் மூலம், தூத்துக்குடியில் உதிரி பாகங்களுக்கான தொழிற்சாலைகள் அதிக அளவில் வர வாய்ப்புள்ளது. வின்ஃபாஸ்ட், தூத்துக்குடியைத் தேர்வு செய்ததற்கு, குறைந்த விலையில் நிலம் கிடைப்பது மற்றும் துறைமுக வசதி போன்றவை முக்கியமான காரணங்களாக உள்ளன.