‘உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கும் எழுத்தாளருக்கும் என்ன சம்பந்தம்? அது என்ன புத்தக் காட்சியா அல்லது இலக்கியத் திருவிழாவா?’ என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.
அந்த எழுத்தாளர் பெயர் ச்ரிஸ் மில்லர். அமெரிக்காவைச் சேர்ந்த டப்ட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர். அவர் எழுதிய புகழ் பெற்ற புத்தகம் சிப் வார் (Chip War: The Fight for the World’s Most Critical Technology). இந்தப் புத்தகத்தில் நவீன உலகத்தை ‘மைக்ரோ சிப்’கள் எப்படி ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதைப் பற்றி விரிவாக எழுதி இருக்கிறார் மில்லர்.
மைக்ரோ சிப்-கள் நவீன உலகத்தின் எண்ணெய் வளம் என்கிறார்கள். எப்படி பெட்ரோலியம் உலகப் பொருளாதாரத்தை கட்டி ஆள்கிறதோ அதைப் போலத்தான் ‘மைக்ரோ சிப்’களும். தற்போதைய உலகத்தில் ராணுவம், பொருளாதாரம், ஒரு நாட்டின் அதிகாரம் எல்லாமே கம்ப்யூட்டர் சிப்களின் அடிப்படையில்தான் கட்டி எழுப்பப்பட்டுள்ளன.
ஏவுகணையில் இருந்து மைக்ரோவேவ் வரையில் கார்கள், ஸ்மார்ட் போன்கள், ஸ்டாக் மார்க்கெட்டுகள் என அத்தனை துறையிலும் ஆதிக்கம் செலுத்துவது மைக்ரோ சிப்கள்தான். அமெரிக்கா, தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட மைக்ரோ சிப் உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது. இப்போது அதற்குப் போட்டியாக தைவான் கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வந்து விட்டன.
மில்லர் தனது புத்தகத்தில், உலகின் வல்லரசு நாடுகளுக்கு இடையே மைக்ரோ சிப் யுத்தம் எப்படி நடக்கிறது என்பதை விளக்கி இருக்கிறார். அமெரிக்காவை வெற்றி கொள்ள சீனா, மைக்ரோ சிப் உற்பத்திக்கு மட்டுமே அதிக அளவில் செலவு செய்கிறது என்கிறார் மில்லர்.
ச்ரிஸ் மில்லரை பொருளாதார வரலாற்றாசிரியர் என்கிறார்கள். நவீன உலகத்தில் செமிகண்டக்டர் எப்படி ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது என்பதை அவர் தனது புத்தகத்தில் விரிவாக விளக்கி இருக்கிறார். அதே போல சிப் உருவாக்கம் மற்றும் உற்பத்தியிலும், அந்தத் தொழில் நுட்பத்தை ராணுவத்தில் பயன்படுத்துவதிலும் அமெரிக்கா எப்படி முதலிடத்திற்கு வந்தது என்பதையும் விளக்குகிறார்.
‘சோவியத் ரஷ்யாவுடன் நடந்த பனிப் போரில், அமெரிக்கா வெற்றி பெற்றதற்கு கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் அதற்கு இருந்த நிபுணத்துவம்தான் மிக முக்கியமான காரணம்’ என்கிறார் மில்லர். சமீபத்தில், சீனாவும் ராணுவத்தை நவீனமயமாக்குவதில் மைக்ரோ சிப் பயன்பாட்டை அதிகரித்திருக்கிறது என்று மில்லர் தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
எல்லாம் சரி இவர் ஏன் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பேச வேண்டும்?தமிழ்நாடு அரசு இந்த மாநாட்டில் செமிகண்டக்டர் தொடர்பாக கொள்கை ஒன்றை அறிவிக்க இருக்கிறது. எனவே அதில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரைப் பேச அழைத்திருப்பதில் ஆச்சரியமில்லை…..சர்வதேச அறிவை முதலில் பெற வேண்டும் என்பதில், எப்போதுமே தற்போதைய தமிழ்நாடு அரசுக்கு ஆர்வம் அதிகம் என்பதும் இன்னொரு முக்கிய காரணம் எனலாம்!