உறுப்பு தானம்… தமிழ்நாட்டில் ஏற்பட்ட மகத்தான மாற்றம்!
கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த புஷ்பாஞ்சலி, அசோகன் என்ற மருத்துவத் தம்பதியினரின் இளம் வயது மகன் ஹிதேந்திரன் என்பவருக்கு சாலை விபத்தில் மூளைச் சாவு ஏற்பட்டது. அப்போது தனது மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி தமிழ்நாட்டில் முதல் உறுப்பு தானத்தை அந்த தம்பதியினர் துவங்கி வைத்தனர். அவரது இதயம், பெங்களூருவில் உள்ள ஒரு சிறுமிக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
அன்று முதல் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி மாநில உறுப்பு தான விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், “தமது உறுப்புகளைத் தந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தைப் போற்றும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்” என கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அன்று முதல் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அரசு சார்பில் மாவட்ட ஆட்சியரோ அல்லது மூத்த அதிகாரியோ இறுதிச் சடங்கின்போது மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பு அப்போது ஒரு சிறிய விஷயமாக பார்க்கப்பட்டாலும், அந்த யோசனை வீரியமிக்கதாக இருந்ததால், உறுப்பு தானம் செய்வது குறித்து அதுவரை பொதுமக்களிடையே இருந்து வந்த தயக்கத்தை அது தகர்த்தெறிந்து, அவர்களின் அணுகுமுறையில் அது மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் முதலமைச்சரின் அறிவிப்பு வெளியானதிலிருந்து உறுப்பு தானம் செய்ய முன்வருபவர்களின் எண்ணிக்கை ஐந்து வாரங்களில், 2,700 ஐ தாண்டியுள்ளது. நவம்பர் 5 ஆம் தேதி வரை 2,718 பேர் உறுப்பு தானம் கொடுப்பதற்கான உறுதிமொழிகளை வழங்கி உள்ளதாகவும், முதலமைச்சரின் அறிவிப்புக்கு முன்னர் இந்த எண்ணிக்கை மாதத்துக்கு அதிகபட்சமாக 100 என்ற அளவிலேயே இருந்ததாகவும் தெரிவிக்கிறார் தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தைச் சேர்ந்த டாக்டர் என் கோபாலகிருஷ்ணன்.
இதன் மூலம் ஆயிரக்கணக்கானோரின் உயிர் காக்கப்படுவதோடு, அவர்களுக்கு மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்தினரின் வாழ்க்கை துயரங்களும் நீங்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வையும் அது குறித்த பிரச்சாரங்களையும் மேம்படுத்துவதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு, தமிழக அரசு காட்டிய அக்கறையும் ஆக்கபூர்வமான அணுகுமுறையுமே இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதனால்தான் உடல் உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறந்த மாநில விருதை இந்திய அரசிடமிருந்து தொடர்ச்சியாக ஆறு முறை பெற்றுள்ளது தமிழ்நாடு!