உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது!
கடந்த ஆண்டு விவசாய பட்ஜெட்டில், உயிர்ம வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், உயிர்ம வேளாண்மையில் ஈடுபடுவதோடு, அதனை ஊக்குவித்து பிற உயிர்ம விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் விவசாயிகளுக்கு ‘நம்மாழ்வார்’ விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகள் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு முறையே முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நம்மாழ்வார் விருது பெற்றவர்கள்
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோ. சித்தருக்கு முதல் பரிசாக, 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பதக்கமும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.வி. பழனிச்சாமிக்கு இரண்டாம் பரிசாக, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் மற்றும் 7 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பதக்கமும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கு.எழிலனுக்கு மூன்றாம் பரிசாக, ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பதக்கத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.