உச்சம் தொட்ட விற்பனைகள்… தமிழ்நாட்டில் ‘தீபாவளி’ ஜொலித்தது ஏன்?

சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தமிழகத்தில் தீபாவளி பண்டிகை மிக செழிப்பாக மக்களால் கொண்டாடப்பட்டுள்ளது. ஜவுளிக் கடைகள் தொடங்கி, பட்டாசுக் கடைகள், இனிப்பு & பலகாரம் விற்பனை கடைகள், ஆட்டுச் சந்தைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் வரை வியாபாரம் புதிய உச்சத்தை தொட்டதன் பின்னணியில் தமிழ்நாட்டில் மக்களிடையே அதிகரித்த பணப்புழக்கமே காரணம் எனத் தெரியவந்துள்ளது.
கைகொடுத்த மகளிர் உரிமைத் திட்டம்
சத்தமே இல்லாமல் அதிகரித்த இந்த பணப்புழக்கம் அதிகரிப்புக்கு ‘கலைஞர் மகளிர் உரிமை திட்டம்தான்’ காரணம் என கைகாட்டுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள். ஏழை, எளிய குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் இந்த திட்டம், கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கிராமப்புறங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில் தங்களது குழந்தைகளுக்குத் தேவையான புதிய துணிகள், இனிப்புகள் வாங்கி கொடுக்க முடியாமல் தவித்து வந்தனர். ஆனால் எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, பட்டித் தொட்டிகளில் உள்ள ஏழை எளிய மக்களும் கொண்டாடும் வகையில் அவர்களுக்கு ‘கலைஞர் மகளிர் உரிமை திட்டம்’ மூலம் கிடைக்கும் ரூ.1000 உதவி தொகை வெகுவாக கைகொடுத்துள்ளது.

பணப்புழக்கத்தைக் காட்டிய விற்பனை
அதிகரித்த பணப்புழக்கம் காரணமாக ஜவுளிக்கடைகள் முதல் கால்நடை சந்தை வரையிலான வர்த்தகம் உயர்ந்துள்ளது. ஜவுளிக்கடைகள் வியாபாரம் ஒருபுறமிருக்க, இந்த ஆண்டு தீபாவளிக்கு இரு தினங்கள் முன்பாக, தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ஆட்டு சந்தைகளில் ஒரே நாளில் 21 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனையாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அதேபோன்று தீபாவளியையொட்டி, கறிக்கோழி விற்பனை சுமார் 315 கோடி ரூபாய்க்கும் விற்பனையானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சிறிய வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் பட்டாசு விற்பனை சிவகாசி பகுதியில், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் செய்த கொள்முதல் மூலம் மொத்தம் சுமார் 6 ஆயிரம் கோடி அளவுக்கு விற்பனையானதாகவும், இதில் தமிழம் முழுவதுமுள்ள சில்லறை பட்டாசு கடைகளிகளில் 300 கோடி ரூபாய் அளவுக்கு பட்டாசு விற்பனையானதாகவும் தெரியவந்துள்ளது.
தீபாவளியின்போது தமிழகம் முழுவதும் எதிரொலித்த பட்டாசு சத்தம், மாநிலத்தின் பொருளாதாரத்தின் முன்னேற்றத்தையும், அதன் வளமான எதிர்காலத்தை நோக்கிய பாதையையும் வெளிப்படுத்தியது என்றே சொல்லாம். மேலும், கிராமப்புற ஏழை எளியவர்களும் பெண்களும் பொருளாதார ரீதியாக வலிமை பெறுவதினால் சமூகங்கள் மகிழ்ச்சியடைகின்றன என்பதற்கு இது ஒரு சான்றாகவும் திகழ்கிறது.
தீப ஒளி சொன்ன சேதி

சுருக்கமாக சொல்வதானால் பெண்கள் வெறும் பயனாளிகள் மட்டுமல்ல, சமூக-பொருளாதாரப் புரட்சிக்கு வித்திடும் மாற்றத்தின் சிற்பிகள் எனச் சொல்லலாம்!
கலைஞர் மகளிர் உரிமை திட்டம், தீபாவளி கொண்டாட்டத்தில் கைகோர்த்ததால், அந்த திட்டத்தின் உண்மையான முக்கியத்துவம் வெளிப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது பெண்கள் மற்றும் அவர்கள் வாழும் சமூகங்களிடையே ஏற்பட்டுள்ள ஆழமான மாற்றத்தையும் உணர்த்தியுள்ளது.
மொத்தத்தில் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஏற்றப்பட்ட தீபாவளி விளக்குகள், அதன் பாரம்பரிய காரணத்தையும் தாண்டி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அதிகாரமளித்தல் மற்றும் நம்பிக்கை நிறைந்த எதிர்காலத்தை நோக்கிய பாதையில் வெளிச்சத்தைப் பாய்ச்சி உள்ளன!