இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களை டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வர தமிழ்நாடு அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த வாரம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் போர் வெடித்தது. இதன் காரணமாக டெல்லியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவையை இந்தியா தற்காலிகமாக ரத்து செய்தது. இதனால், அங்கிருந்த இந்தியர்கள் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு இஸ்ரேலில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டத்தை ஒன்றிய அரசு தொடங்கியது.
அதன்படி, டெல்லியில் இருந்து நேற்று இஸ்ரேலுக்கு முதல் மீட்பு விமானம் அனுப்பப்பட்டது. அந்த விமானம் மூலம் முதல் கட்டமாக 212 இந்தியர்கள் மீட்கப்பட்டடனர். 212 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு முதல் மீட்பு விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது.
அவர்களை ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று வரவேற்றார். டெல்லி வந்த 212 இந்தியர்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேரை சென்னை, கோவை அழைத்து வர தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு அதிகாரிகளால் 14 பயணிகள் சென்னைக்கும், கோவைக்கு 7 பேரும் இன்று பிற்பகல் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.