இனியாவது மாறுமா ஆளுநர் ரவியின் அணுகு முறை..?
தமிழ்நாடு உட்பட பாஜக ஆட்சியில் அல்லாத மாநில அரசுகள் அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர்கள் இழுத்தடிக்கின்றனர். இந்த நிலையில், இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்த காட்டமான கருத்துகள், சமீபத்திய குழப்பங்கள் மற்றும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இனிமேலாவது ஆளுநர்களின் போக்கில் மாற்றத்தை ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டமன்ற செயல்பாட்டில் ஆளுநர்களின் அதிகாரம் குறித்த விவாதம் மற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காட்டும் தாமதம் போன்றவை, மாநில அரசுகளின் செயல்பாடுகளில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தி வருகின்றன. தமிழ்நாடு அரசால் அனுப்பி வைக்கப்பட்ட பல்வேறு சட்டமசோதாக்கள் ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. இது விஷயத்தில் திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் உச்ச நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. “தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே குறிப்பிட்ட காலம் வரம்புக்குள் மசோதாக்கள் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி மனு தாக்கல் செய்தது.
இத்தகைய சூழ்நிலையில், பஞ்சாப்பிலும் இதே பிரச்சினை நிலவுகிறது. அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தாமதிப்பதாக அந்த மாநில அரசால் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று அதனை விசாரித்தது.
அப்போது, “இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பே ஆளுநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவகாரங்கள் உச்ச நீதிமன்றத்தை அடையும் போது மட்டுமே ஆளுநர்கள் செயல்படும் நிலை முடிவுக்கு வர வேண்டும்… ஆளுநர்களுக்கு கொஞ்சம் ஆன்மா தேடல் தேவை, அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். பஞ்சாப் ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புதுப்பிக்கப்பட்ட நிலை அறிக்கை சில நாட்களில் வெளியிடப்படும் என்றும் சொலிசிட்டர் ஜெனரல் கூறுகிறார். மனுவை வெள்ளிக்கிழமை பட்டியலிடுங்கள், அப்போது ஆளுநர் எடுத்த நடவடிக்கை குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் காட்டமாக கூறினார்கள்.
நம்பிக்கை கொடுத்த உச்ச நீதிமன்றம்
முன்னதாக பஞ்சாப் மாநில அரசின் வழக்கு விசாரணைக்கு வரும் முன்னர் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் பஞ்சாப் வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாடு- கேரளா- தெலுங்கானா அரசுகளும் ஆளுநர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாக தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார். இதனால் நவம்பர் 10 ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசின் ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில், ஆளுநர்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் நேற்றைய அவதானிப்புகளும் தலையீடுகளும், இந்த விவகாரத்தில் அது ஒரு நம்பகமான நடுவராகவும் அரசியலமைப்பு சட்டத்தின் ஒழுங்கை காப்பாற்றும் பாதுகாவலராகவும் இருக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது. மேலும், மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் இடையேயான சட்டச் சிக்கலைத் தீர்ப்பதில் நீதிமன்றம் பங்காற்ற முடியும் என்பதோடு, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும், அரசு நிர்வாகம் செயல்படுவதை உறுதிசெய்வதற்கும் ஒன்றிய அரசைத் தாண்டி, ஒரு வலுவான மற்றும் பாரபட்சமற்ற அமைப்பு இன்னும் உள்ளது என்பதையும் உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்து வெளிப்படுத்தி உள்ளது.
‘ஆளுநரிடம் இனியாவது மாற்றம் வேண்டும்’
இதனிடையே இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணனிடம் ‘அமேசிங் தமிழ்நாடு’ பேசியது. அவர் கூறுகையில், “காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தப்போது அவர்கள் நியமித்த ஆளுநர்களை வைத்து சில சில்மிஷங்களைச் செய்தது நிஜம். ஆனால் இதெல்லாம் சில நேரங்களில் சிலரை சித்திரவதை செய்வதற்காக மட்டுமே செய்தார்கள்.
ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு முழுக்க முழுக்க ஆளுநர்களை அந்தந்த மாநில முதல்வர்களுக்கு எதிராகக் கொம்பு சீவி விட்டு, திட்டமிட்டு அவதூறு பரப்புவது, திட்டமிட்டு சில விஷயங்களில் குறுக்கீடு செய்வது, சிக்கல்களை ஏற்படுத்துவது போன்றவற்றைச் செய்துவருகிறார்கள். சில ஆளுநர்கள் அந்த எல்லையையும் தாண்டி, அரசியல் பேசுகிற அளவிற்குச் சென்றுவிட்டார்கள்.
‘ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இல்லை’ என்கிற வார்த்தையை அழுத்தம் திருத்தமாக அவர்களுடைய தலையில் கொட்டுகிற மாதிரி சொல்லியிருக்கிறது நீதிமன்றம். அப்படியென்றால் ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மதிக்கவேண்டும். அது மறைமுகமாக மக்களை மதிப்பதற்குச் சமம்’ என்று கற்றறிந்த ஆளுநர்களுக்கு நீதிமன்றம் ஒரு பாடம் புகட்டி இருக்கிறது. ஆளுநரும் பாஜகவும் இனிமேலாவது மனமாற்றம் அடைந்து நேர்மையோடு நடந்துகொள்ள வேண்டும் என ஒரு பத்திரிக்கையாளராக எதிர்பார்க்கிறேன்” எனச் சொல்லி முடித்தார்.