அண்ணா பல்கலைக்கழகம் தயார் செய்த ட்ரோன் மூலம், விவசாய பணிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் செய்யப்பட்டு, அது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், ஆற்றுப்படுகையில் சட்ட விரோதமாக மணல் எடுப்பதை கண்காணிக்கவும், வயல்வெளிகளில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளிலும் இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தான் அண்ணா பல்கலைக்கழகத்தின் வானுர்தித் துறையின் மூலம் தயாரிக்கப்பட்ட 50 கிலோ எடையுள்ள சுமை தூக்கும் ஆளில்லா விமானங்களான ‘தக்ஷா ட்ரோன்’ இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள், உயிர்காக்கும் மருந்துகள் போன்ற பெரிய அளவிலான அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை விரைவுபடுத்தும் தளவாட நடவடிக்கைகளில், குறிப்பிடத்தக்க மாற்றத்தை இந்த ட்ரோன்கள் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இமயமலை உள்ளிட்ட மலைப்பகுதியில் உள்ள எல்லைகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் கழுதைகள் மூலம் தான் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் அதிக நேரம் எடுப்பதால், இந்த ட்ரோன்கள் மூலம் கொண்டு சென்றால் விரைவாக கொண்டு செல்ல முடியும்.
இந்த தொழில்நுட்பம், இந்திய ஆயுதப் படைகளின் தளவாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் அவர்களின் திறமைக்கு பங்களிப்பதிலும் முக்கிய பங்க்காற்றும் என்று விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியரும் இயக்குநருமான கே. செந்தில் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
10 கி.மீ பறக்கும் சுற்றளவில், 15 கிலோ வரை எடையுள்ள அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் திறன் கொண்ட இந்த ‘ட்ரோன் மாதிரி’யை வெற்றிகரமாக பல்கலைக்கழகம் உருவாக்கி வரும் நிலையில், அதிக எடையைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட 500 ட்ரோன்களை வாங்க இந்திய ராணுவம் ஆர்டர் செய்துள்ளது.
ட்ரோன்கள் ஒவ்வொன்றும் 15 கிலோ எடையும் கரடுமுரடான நிலப்பரப்புகளிலும், அடைய முடியாத இடங்களிலும் செல்லும். குறிப்பாக வடக்கு காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது என்று பேராசிரியர் கே. செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் சென்னை எம்ஐடிக்கு வருகை தந்த ராணுவக் குழுவினர், காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட பணியாளர்களை அடிப்படை முகாமுக்கு மாற்ற 80 கிலோ எடையுள்ள ட்ரோன்கள் தேவைப்படுவதாகவும் கூறியிருந்தனர். இதனால் அத்தகைய ட்ரோனை வடிவமைக்க ஆராய்ச்சி நடந்து வருகிறது. இந்த டிரோன்கள் ‘ஏர் ஆம்புலன்ஸ்’ போல செயல்படும் எனக் கூறப்படுகிறது.
அண்ணா பல்கலைகழகத்தில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள், இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படுவது தமிழ்நாட்டிற்கே பெருமையானதாக அமைந்துள்ளது!