கல்வியைக் காட்டிலும் போக்குவரத்துக்காக அதிகம் செலவிடும் இந்தியர்கள்!
இந்தியாவில் தனி நபர் மாதாந்திர வீட்டு நுகர்வுச் செலவு இரு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், கல்வியை விட போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்காக இந்தியர்கள் அதிகம் செலவிடுவதும் தெரியவந்துள்ளது.
இந்தியாவின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், வீட்டு உபயோக செலவின கணக்கெகெடுப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. 2022-23 ஆம் ஆண்டுக்கான ஆய்வு முடிவு, இந்திய குடும்பங்களின் செலவு முறை எப்படி உள்ளது என்பது குறித்த தகவல்களைத் தெரிவிக்கிறது.
சுமார் 11 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் தனி நபர் மாதாந்திர வீட்டு நுகர்வுச் செலவு இரு மடங்கு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. சராசரி வீட்டுச் செலவினங்களில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்கள் கல்வி மற்றும் உடல்நலத்தை விட, போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்காக அதிகம் செலவழிக்கின்றன.
பெரும்பாலான இந்தியர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தினாலும், பெட்ரோலுக்கான செலவு, பயணக் கட்டணத்தில் செலவழிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.
நகர்ப்புற குடும்பங்களின் மொத்த மாதாந்திர செலவில் 11.2 சதவீதம், வாகனங்கள் மற்றும் போக்குவரத்திற்காக செலவிடப்படுவதாகவும், அதே நேரத்தில் இந்த எண்ணிக்கை கிராமப்புறங்களில் 9.5 சதவீதம் ஆக உள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் பொருளாதார மந்தநிலையுடன் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்தியாவின் பொருளாதார பின்னடைவுக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்களில் ஒன்றாக நமது நாட்டின் தனியார் நுகர்வு, அதாவது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு குடும்பங்கள் செலவிடும் பணம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 60% ஆக இருப்பது கவலை அளிக்கக்கூடிய அம்சமாக உள்ளதாக கூறுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
மேலும், நுகர்வோர் செலவினங்களில் ஏற்படும் எந்தவொரு போக்கும் நாட்டின் பொருளாதாரப் பாதையில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அதனை உன்னிப்பாக பகுப்பாய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.