உச்ச நீதிமன்றத்திடம் மன்னிப்பு… ஆளுநர் ரவியிடம் இனியாவது மாற்றம் வருமா?
உச்ச நீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்தை தொடர்ந்து, இன்று பொன்முடிக்கு அமைச்சராக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதே சமயம், இனியாவது ஆளுநரின் போக்கில் மாற்றம் வருமா என அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து, அவர் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருக்கோவிலூர் தொகுதிக்கு முதலில் அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டு, அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்வார் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதைத் தொடர்ந்து, பொன்முடியை மீண்டும் அமைச்சராக நியமிக்குமாறு தமிழக ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். ஆனால், அதனை ஏற்க ஆளுநர் மறுத்துவிட்டார்.
உச்ச நீதிமன்றத்தின் கண்டனம்
இதனையடுத்து ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. இவ்வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, “ஆளுநர் ரவி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறியுள்ளார். பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று சொல்வது அவருடைய வேலை அல்ல. அவருக்கு அந்த அதிகாரத்தை அளித்தது யார்? இந்த விவகாரத்தில் நாளைக்குள் ( இன்று) தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். இல்லை என்றால், நாங்களே எங்கள் முடிவை அறிவிப்போம். ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும்” என எச்சரித்திருந்தது.
ஆளுநருக்கு ஏற்பட்ட நெருக்கடி
ஏற்கெனவே, தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பல மசோதாக்களின் கோப்புகளுக்கு ஒப்புதல் கொடுக்காமல் கிடப்பில் போட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் நேற்று காட்டிய கடுமையும், கண்டனமும் அவருக்கு மிகுந்த தலைகுனிவை ஏற்படுத்தியது. மேலும், பொன்முடி விவகாரத்தில் அவர் நேற்று இரவுக்குள் முடிவெடுக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது.
இதனால், அவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ஒருபக்கம் தகவல் வெளியாகத் தொடங்கியது. ஆனால், அப்படி எதுவும் இல்லை என்பதுபோல பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம்
இது தொடர்பாக வெளியான ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ அறிவிப்பில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று (மார்ச் 22) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், தமிழக முதலமைச்சர், மார்ச் 13 நாளிட்ட கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளபடி, க.பொன்முடிக்கு தமிழக அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கிட ஒப்புதல் அளிப்பதாக கூறப்பட்டிருந்தது.
மேலும், தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று, தற்போது அமைச்சர் காந்தியின் பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தினை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்வதாகவும், அக்கடிதத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தார்.இதையடுத்து ஆளுநர் மாளிகையில் இன்று பிற்பகலில் நடந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பொன்முடிக்கு அமைச்சராக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மன்னிப்பு கேட்ட ஆளுநர் ரவி
முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுக்கப்பட்ட தகவல், வழக்கை விசாரித்த நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது செயலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்டதாக அட்டார்னி ஜெனரல் வெங்கட்ரமணி தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், இந்த வழக்கை முடித்து வைத்தது.
இனியாவாது மாறுவாரா?
“தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றதிலிருந்தே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். நீட் தேர்வு, ஆன்லைன் சூதாட்டம் உள்பட பல விவகாரங்களில் தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு மாறான கருத்துகளைப் பேசி வருகிறார். அவ்வப்போது உச்ச நீதிமன்றம் குட்டு வைக்கின்ற போதிலும், அவரது போக்கில் மாற்றம் ஏதும் ஏற்படுவதில்லை. ஏனெனில் அவரை ஆட்டுவிப்பது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக-தான் என்பதால், அவர் அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார்” என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், இனியாவது ஆளுநரின் போக்கில் மாற்றம் வருமா என அரசியல் வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், “தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளானாலும், அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மாட்டார். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே ஆளுநர் ரவி தாமாகவே ராஜினாமா செய்து, இப்பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும்” என அவ்வட்டாரங்களில் விவாதிப்போர் கூறுகின்றனர்.
இதனால், ஆளுநர் அடுத்து என்ன சர்ச்சையைக் கிளப்ப இருக்கிறார் என்கிற எதிர்பார்ப்புதான் இறுதியாக மிஞ்சுகிறது.