“அவர்களுக்கான பதில் கலைஞரின் ‘பராசக்தி’ படத்தின் வசனம்தான்!”
தமிழ்நாட்டில் 1000 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்திய ஆட்சி திராவிட ஆட்சி என தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி கோவிலுக்குச் செல்வது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் கூட்டம் சென்னை ஷெனாய் நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
“என் மனைவி துர்கா ஸ்டாலின் கோவிலுக்குச் செல்கிறார் என்று பரப்புகிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா கோவிலுக்கும் அவர் சென்றுவருகிறார். அது அவருடைய விருப்பம். அதைத் தடுக்க விரும்பவில்லை; தடுப்பதற்கான தேவையும் இல்லை. கோவிலும், பக்தியும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆரிய ஆதிக்கத்திற்குதான் நாங்கள் எதிரி, ஆன்மிகத்திற்கு அல்ல” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், “ஏராளமான கோவில்களில் போராட்டம் நடத்தி வெகுமக்களின் வழிபாட்டு உரிமையைப் பெற்றுக்கொடுத்தது நம்முடைய திராவிட இயக்கம். ’கோவில்கள் கூடாது என்பது அல்ல. கோவில்கள் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது’ என்ற தலைவர் கலைஞரின் ‘பராசக்தி’ படத்தின் வசனம் தான் அவர்களுக்குப் பதில்.
ஆன்மிகத்தையும் அரசியலையும் மிகச் சரியாகப் பகுத்து பார்க்கத் தெரிந்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். 1000 கோவில்களுக்குக் குடமுழுக்கு நடத்திய ஆட்சி திராவிட ஆட்சி. 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துக்களை மீட்ட ஆட்சி திராவிட மாடல் ஆட்சி” என்றும் தெரிவித்தார்.