அரபு மொழி பேசப்போகும்‘பாவேந்தர்’பாரதிதாசனின் சிந்தனைகள்!
“தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்”
என்று பாடிய மறைந்த புரட்சி கவிஞர் ‘பாவேந்தர்’பாரதிதாசனின் செழுமை மிக்க சிந்தனைகளையும் கருத்துகளையும் அரபு தேசத்திற்கு அறிமுகப்படுத்தும் விதமாக, அவரது கவிதைகள் அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, பாரசீக மற்றும் உருது துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான ஏ. ஜாஹிர் உசேன், பாரதிதாசனின் 50 கவிதைகளை அரபு மொழியில் மொழிபெயர்த்துள்ளார். தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த புத்தகத்துக்கான வெளியீட்டு விழா, புதுச்சேரியில் இன்று நடைபெறுகிறது. மறைந்த பாரதிதாசனின் பேரனும் பாரதிதாசன் அறக்கட்டளையின் தலைவருமான கோ. பாரதி வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
என்னென்ன கவிதைகள்?
“அரபு மொழி பேசும் நாடுகளுக்குப் பொருத்தமான இயற்கை, கல்வி, பெண்கள் உரிமைகள், சுதந்திரம் போன்ற தலைப்புகளில் உள்ள பாரதிதாசனின் கவிதைகளைத் தேர்ந்தெடுத்துள்ளேன்,” என்கிறார் உசேன். இவர் இதற்கு முன்னர் திருக்குறள், மறைந்த முண்டாசு கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் மற்றும் ஒளவையாரின் ஆத்திச்சூடி ஆகியவற்றையும் அரபி மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
உலக ஒற்றுமை, கூடி தொழில் செய்க, சுதந்திரம், தொழிலாளார் விண்ணப்பம், புத்தக சாலை, பத்திரிகை, அன்பு, படி, படி, படி, பெண் குழந்தை தாலாட்டு, ஆண் குழந்தை தாலாட்டு போன்றவை அரபு மொழியில் மொழிபெயர்ப்பதற்காக உசேன் தேர்ந்தெடுத்த கவிதைகள் ஆகும்.
திருக்குறளும் அரபு மொழியில்…
தமிழ்நாடு மற்றும் அரபு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் ஒரு கருவியாக உசேன் இந்த மொழி பெயர்ப்பு திட்டத்தை எடுத்துக்கொண்டுள்ளார். குறிப்பிடத்தகுந்த தமிழ்ப் படைப்புகளை அரபு மொழியில் மொழிபெயர்க்கும் பணியை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே தாம் தொடங்கிவிட்டதாக கூறும் உசேன், திருக்குறள் அரபு மொழியில் மொழிபெயர்க்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு இப்பணி வழங்கப்பட்டது. இப்பணி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் மேற்பார்வை செய்யப்பட்டு 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
2015 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் நடைபெற்ற அரபுக் கவிஞர்களின் சர்வதேச மாநாட்டில், உசேன் திருக்குறளில் இருந்து 40 பாடல்களை தனது தனிப்பட்ட ஆர்வத்தின் பேரில் அரபு மொழியில் வழங்கினார். “ அதற்கு அப்போது பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது” என்று நினைவு கூரும் அவர். 2021 ஆம் ஆண்டில், இசையமைப்பாளர் தாஜ் நூருடன் இணைந்து, அரேபிய மொழியில் இசை அமைக்கப்பட்டுள்ள திருக்குறள் ஆடியோ வடிவத்தில் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கிறார்.
ஆத்திச்சூடி, பாரதியார் கவிதைகள்
ஒளவையாரின் ஆத்திச்சூடியையும் 2015 ஆம் ஆண்டு உசேன் மொழிபெயர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று சுப்பிரமணிய பாரதியின் கல்வி, பெண்கள் சுதந்திரம், குழந்தைகள், இயற்கை மற்றும் தேசபக்தி ஆகிய கருப்பொருளில் இருந்து அல்லா, சுதந்திரப் பயிர், துடிக்கின்ற நெஞ்சம், அச்சம் இல்லை போன்றவை உட்பட 25 கவிதைகளையும் அரபு மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
( இன்று புரட்சி கவிஞர் ‘பாவேந்தர்’பாரதிதாசனின் பிறந்த நாள் )