அரசுப் பள்ளிகள் டிஜிட்டல் மயம் : ‘கைக்கணினி’களுடன் அப்டேட் ஆகப்போகும் ஆசிரியர்கள்!
கல்வி கற்பதும் கற்றுக்கொடுப்பதும் டிஜிட்டல் மயமாகிவிட்ட இன்றைய சூழ்நிலையில், ஆசிரியர்களையும் அதற்கேற்ப தயார்படுத்துவது என்பது அவசியமாகி விட்டது.
அந்த வகையில், காலமாற்றத்துக்கேற்ப கல்வியை நவீனமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசு தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ‘கைக்கணினி’ எனும் உயர் தொழில்நுட்பத்திலான டேப்லெட்டுகள் வழங்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
அதன்படி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 80,000 ஆசிரியர்களுக்கு இந்த ‘கைக்கணினி’ வழங்கப்பட உள்ளதாக கல்வித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் முதல்கட்டமாக செங்கல்பட்டு, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த 14,796 ஆசிரியர்களுக்கு இந்த ‘கைக்கணினி’ வழங்க அந்தந்த மாவட்ட கல்வி அலுவலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பும் பராமரிப்பும்
இவ்வாறு பெறப்படும்‘கைக்கணினி’களை மேல்நிலை, உயர்நிலைப்பள்ளி தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் வைத்து பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் எனவும், கண்காணிப்பு கேமராக்களை அந்த அறையில் பொருத்தி கண்காணிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு, கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இதில் எந்த சுணக்கமோ அல்லது கவனக்குறைவான செயல்பாடோ இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் போர்டுகள்
முதல்கட்ட விநியோகம் முடிவடைந்த நிலையில், 2-ம் கட்டமாக 17 மாவட்டங்களைச் சேர்ந்த 18,625 ஆசிரியர்களுக்கும், 3-ம் கட்டமாக 6 மாவட்டங்களை சேர்ந்த 11,711 ஆசிரியர்களுக்கும் கையடக்க கணினி அனுப்பிவைக்கப்பட உள்ளது.
இதேபோல், உயர்தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்கப்பட உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கு தேவையான கம்ப்யூட்டர் மற்றும் அதற்கான சாதனங்களும், ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்பட உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளுக்கான ஸ்மார்ட் போர்டுகளும் வருகிற 1-ஆம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட இருக்கின்றன.
ஆசிரியர்களுக்கு எப்படி உதவும்?
ஆன்லைன் வருகைப் பதிவு, பாடங்கள் எந்த அளவுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது போன்ற விவரங்களைப் பதிவிடுவது, கற்றலுக்கான கூடுதல் பாடக்குறிப்புகள் விவரங்களைத் தெரிந்துகொள்வது போன்றவற்றுக்காக ஆசிரியர்களுக்கு இந்த டேப்லெட் கணினிகள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை இணைக்கும் பொதுவான ஆன்லைன் தளமான கல்வி மேலாண்மை தகவல் அமைப்பையும் (EMIS) அவர்கள் இயக்குவார்கள். மேலும், ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் தேவையான வீடியோ டுடோரியல்களும் ஏற்றப்படும். டேப்லெட்களின் configuration ( கட்டமைப்பு), வேகமான மொபைல் இணைய அனுபவத்தை வழங்கும் வகையில் 2G, 3G, 4G LTE சப்போர்ட்டுடன் இருக்கும்.