Amazing Tamilnadu – Tamil News Updates

அயலகத் தமிழர் துறை என்னவெல்லாம் செய்கிறது? முதலமைச்சர் போட்ட பட்டியல்!

சென்னை வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் தின விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம், மலேசிய நாட்டுத் துணை அமைச்சர் குலசேகரன், இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மலேசிய நாட்டு முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் சதாசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் சண்முகம் பங்கேற்றது சிறப்பு என்று கூறினார்.

வெளிநாட்டு வாழ் தமிழர்களின் துயரங்களைக் களைய 2010-ஆம் ஆண்டு அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் “வெளிநாடுவாழ் தமிழர் நலப்பிரிவு” உருவாக்கியதை முதலமைச்சர் குறிப்பிட்டார். தற்போது
அயலகத் தமிழர் துறையை உருவாக்கி, தனி அமைச்சரையும்
நியமித்து, உங்களுடைய அவசரத் தேவைகள் உடனுக்குடன் சிறப்பான
முறையில் தீர்த்து வைக்கப்பட்டு வருகிறது என்றார்.

“வெளிநாடுகளில் நிரந்தரக் குடியுரிமை உள்ள தமிழர்களுடைய குழந்தைகளுக்கு தமிழ் மீது ஆர்வத்தை உருவாக்கி, தமிழ்
இணையக் கல்விக் கழகம் மூலமாக தமிழ் கற்றுத் தரப்படுகிறது.
வெளிநாடுகளில், கைது செய்யப்படுகின்ற சூழலுக்கு ஆளாகின்ற
தமிழர்களுக்கு உரிய சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அயல்நாடுகளில் உதவி தேவைப்படுகின்ற தமிழர்களுக்கு, ஒன்றிய
அரசின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் தொடர்புடைய இந்தியத்
தூதரகத்துடன் இணைந்து, உரிய நிவாரண நடவடிக்கைகளை
இந்தத் துறை சிறப்பாக செய்து வருகிறது.

மருத்துவ இயலாமை மற்றும் பல்வேறு காரணங்களால் தாயகம்
திரும்ப முடியாமல் கஷ்டப்படுகின்ற தமிழர்களை, தாய்நாட்டிற்கு அழைத்துக் கொண்டு வரவும், அங்கு இறக்க நேரிடும் தமிழர்களின் உடல்களை இந்தியா கொண்டு வரவும், தமிழ்நாடு அரசால் 1 கோடி ரூபாய் சுழல்நிதி ஏற்படுத்தப்பட்டு, தமிழர்களுடைய துயரங்களை துடைக்கின்ற பணி உரிய முறையில் செய்யப்பட்டு வருகிறது.

பாதுகாப்பான புலம் பெயர்தலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி மற்றும் தொழிற்கல்வி நிலையங்களில், விழிப்புணர்வுப் பயிற்சிகள்
வழங்கப்பட்டிருக்கிறது. அயல்நாட்டில் வசிக்கின்ற நம்முடைய தமிழர்கள், இங்கு இருக்கின்ற அவர்களுடைய குடும்பத்தினர் எதிர்கொள்ளுகின்ற நிலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை களைய, டி.ஜி.பி அலுவலகத்தில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டிருக்கிறது.

அயல்நாடுகளுக்குச் செல்கின்ற தமிழர்களுக்கு, அந்த நாடுகளின்
சட்டம், பண்பாடு மற்றும் மொழி தொடர்பான குறைந்தபட்சப்
புரிதலை உருவாக்க, சென்னையில், முன்பயண புத்தாக்கப் பயிற்சி
மையம் செயல்பட்டு வந்தது. இப்போது, தஞ்சாவூர், புதுக்கோட்டை,
ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, பெரம்பலூர் மற்றும்
விழுப்புரம் மாவட்டங்களிலும் இந்த மையங்கள் புதிதாக
ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

உக்ரைன், சூடான், கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் என்று
பல்வேறு நாடுகளில் இருக்கின்ற நம்முடைய தமிழர்கள் அங்கு
எதிர்பாராத விதமாக பிரச்னைகளை சந்திக்கின்றபோது,
தமிழ்நாடு அரசு விரைவாக செயல்பட்டு பத்திரமாக
அழைத்துக்கொண்டு வந்திருக்கிறது.

அயல்நாடுகள் மட்டுமில்லாமல், மணிப்பூர் கலவரம், அமர்நாத்
பனிச்சரிவு போன்ற இந்தியாவின் பிற மாநிலங்களில் ஏற்படுகின்ற
இயற்கை இடர்ப்பாடு மற்றும் அசாதாரண சூழ்நிலைகளிலும்
தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்பதில் கண்ணும் கருத்துமாக
நாங்கள் செயல்பட்டதை நீங்களே பார்த்தீர்கள்” என்று அயலகத் தமிழர் துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை முதலமைச்சர் பட்டியலிட்டார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில்
உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ‘எனது கிராமம்’ திட்டம்
துவங்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்ட முதலமைச்சர், வெளிநாடு வாழ் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய சேமிப்பை தமிழ்நாட்டில் பாதுகாப்பாக முதலீடு செய்ய ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி இவர்கள் முதலீடுகள் அரசு மற்றும் தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்ய ஏதுவான சூழலையும் உருவாக்கி இருப்பதாவும் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ஆம் நாள் அயலகத் தமிழர் நாளாக
கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக
சிறப்பாக தொடர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

‘வேர்களைத் தேடி’ என்பது, இந்த ஆண்டுக்கான முத்தாய்ப்பான திட்டமாக
அமைந்திருக்கிறது. ஆண்டுதோறும் 200 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து,
பண்பாட்டு சுற்றுலா அழைத்துகொண்டு செல்வதற்கு இந்தத் திட்டம்
அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, 58 இளைஞர்களை தமிழ்நாட்டிற்கு
அழைத்துகொண்டு வந்து, டிசம்பர் 27-ஆம் தேதி முதல் ஜனவரி 10-ஆம்
தேதி வரை 15 நாட்கள், தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற கலை,
இலக்கியம், பண்பாடு, பழம்பெரும் கட்டடம், வணிகம், விடுதலைப்
போராட்டத்தில் நம்முடைய பங்கேற்பு, ஆடைகள் தயாரித்தல்,
அணிகலன் செய்தல் என்று தமிழர்களின் அனைத்து மாண்புகளையும்
பார்த்துகொண்டு வந்து, அவர்களுடைய அனுபவங்களை இங்கே பகிர்ந்து
கொண்டார்கள் என்று கூறிய முதலமைச்சர், இதன் மூலம் இந்தத் திட்டத்தின் வெற்றியை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்றார்.

இந்த ஆண்டின் அயலகத் தமிழர் நாள் கொண்டாட்டம், ‘தமிழ்
வெல்லும்’ என்ற கருப்பொருளில் நடந்ததைக் குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எங்கு வாழ்ந்தாலும் தாய்த்தமிழ் நாட்டை மறக்காதீர்கள்! அடிக்கடி உங்கள் குழந்தைகளோடு தமிழ்நாட்டிற்கு வாருங்கள்! கீழடி, பொருணை, ஆதிச்சநல்லூரை காட்டுங்கள்! தமிழோடு இணைந்திருங்கள்! நீங்கள் எங்கு வாழ்ந்தாலும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், நமது திராவிட மாடல் அரசுக்கும் துணையாக இருந்திடுங்கள்! என்று கேட்டு, அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துகளைக் தெரிவித்து
விடைபெறுகிறேன் என்றார்.

Exit mobile version