அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம்: தமிழ்நாட்டில் உருவான 2,136 தொழில்முனைவோர்!
எந்த தொழில் செய்ய வங்கிக் கடன் கேட்டாலும், அதில் தொழில்முனைவோரும் குறிப்பிட்ட சதவிகித நிதியை முதலீடு செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. இது, தொழில் முனைவோராக விரும்பும் பட்டியல் மற்றும் பழங்குடி சமூகத்தினருக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வந்ததால், அவர்களில் பெரும்பாலானோரால் தொழில்முனைவோர் ஆவது இயலாத காரியமாக இருந்து வந்தது.
முதலீடு தேவை இல்லை… 35 சதவீத மானியம்
இந்த நிலையில், இந்தத் தடையை அகற்றி பட்டியல் மற்றும் பழங்குடி பிரிவினர் எவ்வித முதலீடும் இன்றி முன்கூட்டியே வழங்கப்படும் மானியத்தின் மூலம்
பல்வேறு தொழில்களைத் தொடங்க ஏதுவாக, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு மே மாதம் கொண்டு வந்தது. இதற்காக பட்ஜெட்டில், 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பம் செய்யும் பொழுது மொத்த திட்ட மதிப்பீட்டில் இருந்து 65 சதவீதத்தை வங்கி கடனாகவும் 35 சதவீதத்தை தமிழக அரசிடம் இருந்து மானியமாக பெற்றுக் கொள்ளலாம். இதனால், இத்திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கும் பயனாளியின் பங்காக எவ்வித தொகையும் வங்கியில் செலுத்த வேண்டியதில்லை.
அதிகபட்சமாக ரூ.1.5 கோடி வரை கடன் வழங்கப்படும். அதே போல 6 சதவீதம் மும்முனை வட்டி மானியமும் இருக்கிறது. நேரடி வேளாண்மை தவிர்த்து உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த எந்த தொழிலுக்கும் கடனுதவியோடு இணைந்து மானியம் இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும். ஏற்கனவே தொழில் செய்து வந்தாலோ அல்லது புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்றாலோ இந்த திட்டத்தின் மூலமாக விண்ணப்பித்து கடன் உதவி பெற்றுக் கொள்ளலாம்.
என்னென்ன தொழில்கள்?
இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில் நிறுவனங்கள் துவங்கலாம். உணவு பதப்படுத்துதல், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், தென்னை நார் உற்பத்தி, ஹாலோ ப்ளாக், சாலிட் ப்ளாக் தயாரிப்பு, பல்பொருள் அங்காடி, வணிகப் பொருட்கள் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை, ஆட்டோ மொபைல் சர்வீஸ், உடற்பயிற்சிக்கூடம், அழகு நிலையம், பயணியர் மற்றும் சரக்குப் போக்குவரத்து, ஆம்புலன்ஸ், ஜேசிபி, அமரர் ஊர்தி, எரிபொருள் விற்பனை நிலையம், திருமண மண்டபம் போன்ற பல்வேறு தொழில்களை இத்திட்டத்தின் கீழ் துவங்கலாம்.
இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்யும் பயனாளிகளுக்கு கல்வித் தகுதி தேவையில்லை. புதிதாக தொழில் தொடங்கும் பயனாளிகளின் வயது வரம்பு 18 முதல் 55 வரை இருக்க வேண்டும். தனி நபர், பங்குதாரர்கள், பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். மேலும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தை மேலும் மேம்படுத்தவும் மானியத்துடன் கூடிய கடனுதவி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
இதில் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும், ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான உதவிகளுக்கு மாவட்ட தொழில் மையத்தினை அணுகி, பயன்பெறலாம் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இதுவரை பயன்பெற்றோர் 2,136 பேர்
இந்த நிலையில், அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில், 7,451 பேர் விண்ணப்பித்தனர். அதில், 2,136 நபருக்கு, 247 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு 160 கோடி ரூபாய் மானியம் வழங்கும். அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் துவங்கிய ஓராண்டிலேயே, எதிர்பார்த்ததை விட அதிகம் பேர் விண்ணப்பித்ததால், பட்ஜெட்டில் ஒதுக்கியதை விட கூடுதல் நிதி பெறப்பட்டது. நிலுவையில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு வரும் ஆண்டில் கடன் வழங்கப்படும் என சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற, பயனாளியின் புகைப்படம், ஆதார் அட்டை , குடும்ப அட்டை, வகுப்பு சான்றிதழ், திட்ட அறிக்கை, விலை புள்ளி ஆகிய ஆவணங்களுடன் http://msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கவேண்டும்.