அமிதாப்பையும் விட்டுவைக்காத கிரிக்கெட் மூட நம்பிக்கை!
சென்டிமென்ட், மூடநம்பிக்கை போன்றவை சாமானியர்களிடத்தில் மட்டுமல்ல பிரபலங்களிடமும் காணப்படுவது உண்டு. அந்த வகையில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனிடமும் ஒரு சில மூட நம்பிக்கைகள் இருக்கிறது போல.
இதனை அவரே ஒப்புக்கொண்டும் இருக்கிறார். எல்லாம் சரி… எந்த விஷயத்தில் அவருக்கு மூடநம்பிக்கை என்று சொல்லவில்லையே… வேறு எதிலும் இல்லை, கிரிக்கெட் மேட்சை பார்ப்பதில்தான் அவருக்கு ஒரு வகையான மூட நம்பிக்கை உள்ளதாம்.
அதாவது, கிரிக்கெட் விளையாட்டை ரசித்து பார்ப்பதில் அமிதாப் பச்சனுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு என்றாலும், “கிரிக்கெட் ஆட்டங்களைக் காண தாம் போட்டி நடக்கும் திடலுக்கு நேரில் சென்றால் தனக்குப் பிடித்த அணி தோற்றுவிடுகிறது” என்பதால், கிரிக்கெட் போட்டிகளை நேரில் சென்று பார்ப்பதில்லை என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “முன்பெல்லாம் இந்தியா விளையாடும் போட்டி எதுவாக இருந்தாலும் தவறாமல் பார்த்து விடுவேன். அந்தப் போட்டிகளை நேரில் சென்று பார்க்க எனக்கும் ஆசைதான். ஆனால் நேரில் சென்றால் எனக்குப் பிடித்த அணி தோற்றுவிடுகிறது. சிலமுறை அப்படி நடந்ததால் இனி கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்கக்கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். கிரிக்கெட் போட்டிகளை வீட்டில் இருந்து தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
தற்போது இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டியையாவது நேரில் சென்று பார்ப்பீர்களா என்று கேள்விக்கு, “போக விரும்பவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்” எனப் பதிலளித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியாவில் தொடங்கியுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் காண அமிதாப்புக்கு அழைப்பு விடுத்துள்ளாராம் ரஜினி.