அமலாக்கத்துறை விவகாரத்தில் திருப்பம்… தமிழக அரசே சட்டம் இயற்றும்?

பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் பாரபட்சமாக நடந்து கொள்வதாக நீண்ட நாட்களாக நிலவி வரும் பிரச்னைக்குத் தீர்வு காணும் விதமாக, தமிழக அரசே சட்டம் இயற்ற உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது, இவ்விவகாரத்தில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க 20 லட்ச ரூபாய் லஞ்சம் பெற முயன்ற போது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கைது செய்தனர்.

மதுரை மத்தியச் சிறைக்கு அடைக்கப்பட்டுள்ள அவர், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்நிலையில் அங்கித் திவாரி மீது அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்தது. அதன்படி, அங்கித் திவாரி தொடர்பான வழக்கை, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்ற உத்தரவிடக் கோரி மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, தமிழக காவல்துறை வழக்கு தொடர்பான முதல் தகவல்கள் அடங்கிய அறிக்கையை தர மறுப்பதாகவும், அரசு தரப்பில் அதிகாரிகள் தலையீட்டால் வழக்கு தொடர்பான தகவல்களை இணையத்தில் பதிவேற்றாமல் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபில் மற்றும் அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் ஆஜராகி, அமலாக்கத்துறை அதிகாரி வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவு என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று கூறினர்.

இது தொடர்பாக கபில்சிபல் தனது வாதத்தின்போது, “ஒரு சில மாநிலங்களை குறிவைத்தே சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் செயல்படுகின்றன. தமிழ்நாட்டை மட்டுமே அமலாக்கத்துறை குறிவைக்கிறது. மகாராஷ்டிரா, குஜராத் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறை இப்படித்தான் செயல்படுகிறதா? அசாம் முதலமைச்சர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை. அங்கித் திவாரியின் மீதான விசாரணையை அமலாக்கத்துறை முடக்க முயற்சி செய்கிறது” எனக் குற்றம் சாட்டினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்குகளை விசாரிக்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டி உள்ளதாகவும், புலனாய்வு அமைப்புகள் வழக்கு விசாரணையில் காழ்புணர்ச்சியை வெளிப்படுத்தாத வகையில் விசாரிக்க வேண்டும் என்றும் கூறினர்.

மேலும், சிபிஐ – அமலாக்கத்துறை – மாநில அரசுகள் இடையே பிரச்னை வருவதால், இதற்கு தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு அரசே சட்டம் இயற்றலாம். தமிழ்நாடு அரசு இயற்றும் சட்டத்தை பிறமாநிலங்களும் பின்பற்றலாம் என்றும் கூறி, வழக்கு விசாரணை விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒப்படைக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து தமிழக அரசு விரைவில் இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபடும் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Anonymous case studies :. Petersburg, russia) – a stunning collection of over 3 million items, including works by rembrandt, da vinci, and michelangelo.