‘நிர்மலா சீதாராமனும் கரகாட்டக்காரன் வாழைப்பழ காமெடியும்!’
தமிழ்நாடு கேட்ட வெள்ள நிவாரண நிதியைக் கொடுக்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
இது ஒருபுறமிருக்க, பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தையும் மாநில அரசு வழங்கிய வெள்ள நிவாரணத்தையும் ‘பிச்சை’ என்று விமர்சித்ததற்காக கடும் கண்டனங்களை எதிர்கொண்டிருந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்த நிலையில், தற்போது சென்னைக்கு ரூ.5000 கோடியை சிறப்பு நிதியாக வழங்கி இருப்பதாக அவர் கூறி இருப்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருப்பதோடு, தமிழக அரசு கேட்கும் நிதி வேறு, நிர்மலா சீதாராமன் சொல்லும் நிதி வேறு என்றும், ‘அதுதான் இது… இதுதான் அது’ என ‘கரகாட்டக்காரன்’ பட வாழைப்பழ காமெடி போல் அவர் பேசிக்கொண்டிருக்கிறார் என சாடியுள்ளார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து உரையாற்றுகையில், இந்த விவகாரத்தைத் தொடர்பாக பேசினார் மு.க. ஸ்டாலின்.
அவர் பேசுகையில், “ஒன்றிய அரசு நிதி ஒரு ரூபாய்கூட கொடுக்காமல், கணக்கு கேட்கிறீர்களே கணக்கு… மாநில அரசு நிதியில் இருந்து என் மக்களுக்காக நான் செய்ததற்குக் கணக்கு சொல்கிறேன். குறித்துக் கொள்ளுங்கள்…
மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் 3 சுற்றுப்புற மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பிற்கு 10 அரசாணைகள் வெளியிட்டு, 2 ஆயிரத்து 476 கோடி ரூபாய்க்கு மேல் மாநில அரசே நிவாரண உதவிகளைச் செய்திருக்கிறது. மிக்ஜாம் புயலுக்கு ஒன்றிய அரசு நிதி எதுவும் கொடுக்கவில்லை… டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பிற்கும் ஒன்றிய அரசு நிதி கொடுக்கவில்லை… இராமநாதபுரம் மாவட்ட வறட்சிக்கும் ஒன்றிய அரசு நிதி கொடுக்கவில்லை! இது எல்லாவற்றிற்குமேல் மாநில அரசு நிதியைத்தான் கொடுத்தோம்! எதற்குமே நிதி கொடுக்காமல் பிரதமர் மோடி மாதிரியே நிர்மலா சீதாராமனும் வாயால் வடை சுடுகிறார்.
மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களே… ஓட்டுக் கணக்கு போட்டு, பொய்களை அள்ளி வீசினால் மக்கள் ஏமாந்துவிடுவார்கள் என்று மனக் கணக்கு போடாதீர்கள்.. நாள் கணக்கில்தான் உங்கள் ஆட்சி இருக்கிறது… ஆணவத்தில் தப்புக் கணக்கு போடாதீர்கள்!
நான் மறுபடியும் தெளிவாகச் சொல்கிறேன்… நாங்கள் கேட்கும் நிதி, N.D.R.F. என்ற தேசிய பேரிடர் நிதியில் இருந்து, 37 ஆயிரம் கோடி ரூபாயைத் தாருங்கள் என்று கேட்கிறோம். அதில் செலவு செய்யாமல் 58 ஆயிரம் கோடி ரூபாயை வைத்திருக்கிறீர்களே… அந்த நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.
வாழைப்பழ காமெடி
அவர்கள் கொடுத்ததாகச் சொல்வது, பேரிடர் ஏற்பட்டாலும் ஏற்படவில்லை என்றாலும் நமக்குக் கண்டிப்பாகத் தர வேண்டிய S.D.R.F. என்ற மாநிலப் பேரிடர் நிதி! கரகாட்டக்காரன் படத்தில் வருமே… வாழைப்பழ காமெடி, அது போன்று… ‘அதுதான் இது – இதுதான் அது’ என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டைப் பார்த்தால், அவர்களுக்கு நக்கலாகத்தான் இருக்கிறது! நாங்கள் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்திருக்கிறோம் என்று ஒவ்வொரு உதவிகள் வழங்கும் போதும், செய்திக்குறிப்பாகத் தந்து, அதெல்லாம் செய்திகளில் வந்திருக்கிறது. அதையெல்லாம் அம்மையார் கொஞ்சம் படிக்க வேண்டும்… அதை விட்டுவிட்டுத் தமிழ்நாட்டு மக்களைப் பார்த்து, ஏகடியம் – நக்கல் – நையாண்டி – கிண்டல் – கேலி என்று ஆணவமாகப் பேச வேண்டாம். ஒன்று மட்டும் தெளிவாகிவிட்டது… பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு கொடுக்க உங்களிடம் பணம் இருக்கிறது; ஆனால் மனம்தான் இல்லை!” எனக் குற்றம் சாட்டினார்.
தமிழ்நாட்டைப் பார்த்தால் எப்படி தெரிகிறது?
மேலும் இதே விவகாரம் தொடர்பாக, இன்று தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “நீங்கள் கேட்கும்போதெல்லாம் நிதி கொடுக்க முடியாது என்று ஆணவமாகப் பேசும் அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்களே…
தமிழ்நாட்டைப் பார்த்தால் எப்படி தெரிகிறது?
5000 கோடி ரூபாய்க்கு கணக்கு கேட்கிறீர்களே…
நாங்கள் கடனாக வாங்கிய தொகை என்ன ஒன்றிய அரசில் இருந்து நீங்கள் கொடுத்ததா?
NDRF-லிருந்து தமிழ்நாட்டுக்குக் கொடுக்கப் பணம் இருக்க, உங்களுக்கு மனம் வராதது ஏன்?
ஆணவம் வேண்டாம்; தப்புக்கணக்கு போடுகிறீர்கள். நாள் கணக்குதான் இனி…” எனக் கூறியுள்ளார்.