மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி ( Union Public Service Commission – UPSC), ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக, சிவில் சர்வீசஸ் எனப்படும் குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது.
45 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்
அந்த வகையில், கடந்த 2023 ஆம் ஆண்டில் நடந்த யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் மொத்தம் 1016 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில், 45 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பெருமை மாநிலத்துக்கு கிடைத்துள்ளது. மேலும், முதல் 100 இடங்களில் வந்தவர்களில் (Top 100) 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற பெருமையும் கிடைத்துள்ளது.
தமிழக அளவில் முதலிடம்
இந்திய அளவில் தமிழகத்தைச் சேர்ந்த 27 வயதான புவனேஷ் ராம், 41 ஆவது இடத்தை பெற்று தமிழக அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் தனது ஆறாவது முயற்சியில் 41வது ரேங்க் பெற்றுள்ளார். இவரது தந்தை தியாகமூர்த்தி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் ( Tangedco ) பணிபுரிகிறார். தாய் எஸ் சுகந்தி சிறப்புக் கல்வியாளர்.
முதல் முயற்சியிலேயே சாதித்த மருத்துவ பட்டதாரி
அதே சமயம், இந்திய அளவில் 78 ஆவது இடத்தையும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் 2 ஆவது இடத்தையும் பிடித்துள்ள எஸ். பிரசாந்த், தனது முதல் முயற்சியிலேயே இந்த சாதனையை எட்டிப்பிடித்துள்ளார். மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்ட பெற்ற 24 வயதான பிரசாந்த், மருத்துவ படிப்பின் போது 40 தங்கப் பதக்கங்களைப் பெற்றவர்.
கைகொடுத்த ‘நான் முதல்வன்’ திட்டம்
இவர் தனது வெற்றிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த ‘நான் முதல்வன்’ திட்டம் மிகவும் உதவிகரமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் சேர்ந்து சிவில் சர்வீசஸ் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்ததாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், புற்றுநோயால் தந்தையை இழந்த நிலையில் ‘நான் முதல்வன் திட்டம்’ மூலம் கிடைத்த நிதி தனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘நான் முதல்வன்’ திட்டத்தில் சேர்ந்தபோது அமைச்சர் உதயநிதியிடம் பதக்கம் பெற்றதையும் நினைவுகூர்ந்துள்ளார்.
‘நீட்’ தேர்வுக்கு முன், 2016 ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் MBBS இல் சேர்ந்த மாணவர்களின் கடைசி பேட்ச் மாணவர்களில் பிரசாந்தும் ஒருவர். இந்திய மருத்துவ சங்கம் போன்ற அமைப்புகளில் தான் வகித்த தலைமைப் பதவிகளும், தாம் இந்த தேர்வில் வெற்றிபெற உதவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது நான்காவது முயற்சியில் 79 ஆவது ரேங்க் பெற்றுள்ள எஷானி ஆனந்த், கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பொறியியல் முடித்தவர்.
450 மாணவர்களுக்கு ரூ. 25,000 உதவித்தொகை
இந்த ஆண்டு, தமிழகத்தைச் சேர்ந்த 450 மாணவர்கள் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், மாநில அரசிடமிருந்து ரூ. 25,000 உதவித்தொகை பெற்றுள்ளனர். மாநில அரசின் உதவித்தொகை பெற்ற 37 பேர் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 45 பேர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
இந்த நிலையில், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தும், பாராட்டுதல்களும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப்பதிவில், “ UPSC குடிமைப் பணித் தேர்வு 2023–ல் வெற்றி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் அனைவருக்கும் எனது பாராட்டுகள். தேசத்துக்காகப் பணியாற்ற அடியெடுத்து வைக்கும் அவர்களது பயணம் சிறக்க வாழ்த்துகிறேன். அவர்கள் செல்லும் இடமெல்லாம் நல்மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்துவார்களாக” என வாழ்த்தியுள்ளார்.
வெற்றி பெற்றவர்களுக்கு ‘அமேசிங் தமிழ்நாடும்’ தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.