மழைக்கு ஒதுங்கும் மக்களே உஷார்! இதை மட்டும் செய்யாதீங்க…
மழைக்காலங்களில் மின்கசிவு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. மின்சாரம் தாக்கும் அபாயம் வீட்டிலும் வெளியிலும் உள்ளது. மின்சார தாக்குதலில் இருந்து உங்களை எவ்வாறு காத்துக் கொள்வது, மின்சாரம் தாக்கிய பிறகு என்ன செய்வது என்பது பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்…
கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதியில் கனமழை பெய்த நிலையில் சென்னை, அசோக் நகர் அருகே சாலையில் செல்போன் பேசியபடி நடந்துசென்ற மணிகண்டன் என்பவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார். அதன் காரணம் குறித்து விசாரித்தபோது செல்போன் பேசிய கொண்டிருந்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.
இதேபோன்று தி.நகரில் மின்கம்பம் அருகே ஒருவர் மழைக்கு ஒதுங்கியிருக்கிறார். அப்போது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். உயிரிழந்த நபர் அசாமைச் சேர்ந்த அப்பு அனிப் என்று கண்டறியப்பட்டுள்ளது. காலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட கொரட்டூரைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னையை அடுத்த காட்டங்குளத்தூர் ஏரிக்கரையில் செல்போன் பேசிக்கொண்டிருந்த மாணவர் ஒருவர் கீழே விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்தார். மேலும் அந்த மாணவரின் உடல் அருகே அவரது செல்போன் கருகி இருந்ததாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் மழை நேரங்களில் நாம் என்ன செய்ய வேண்டும்… என்ன செய்ய கூடாது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்…
மின்சார பிளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ‘ஆப்’ செய்ய வேண்டும். ரெப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு, நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுங்கள்.
உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விடுங்கள். பழுதுபட்ட மின்சார சாதனங்களை உபயோகிக்கதீர்கள்.சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை, குழந்தைகளுக்கு எட்டும் உயரத்தில் இருந்தால் அதில் அதனை மறைக்க வேண்டும். குளியலறையிலும் கழிப்பறையிலும் ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளைப் பொருத்தாதீர்கள்.
சுவற்றின் உள் பகுதியில் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் வயர்களுடன் கூடிய பி.வி.சி. பைப்புகள் பதிக்கப்பட்டிருந்தால், அப்பகுதிகளில் ஆணி அடிப்பதை தவிர்க்கவும். மின் கம்பத்திலோ அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளைக் கட்டாதீர்கள். மின் கம்பங்களை, பந்தல்களாக பயன்படுத்தக்கூடாது. அதன் மீது விளம்பர பலகைகளை கட்டக்கூடாது. மழைகாலங்களில் மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின்பகிர்வுப் பெட்டிகள், stay வயர்கள் ஆகியவற்றின் அருகே செல்லாதீர்கள்.
மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மேல் நிலை மின்சார கம்பி அருகே செல்லாதீர்கள்; அது குறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாகத் தகவல் அளிக்க வேண்டும்.
தமிழ்நாடு மின்வாரிய மின் மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையத்திற்காக போடப்பட்டுள்ள வேலியின் அருகில் சிறுநீர் கழிக்க செல்லாதீர்கள்.மின் வாரியத்தின் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரியத்தின் அலுவலர்களை அணுகவும்.
அவசர நேரங்களில், மின் இணைப்பினை விரைந்து துண்டிக்கும் வகையில் மின் கருவிகளின் சுவிட்சுகள் இருப்பிடம் அமைய வேண்டும். மின் சாதனங்கள் உபயோகத்தில் இல்லாத பட்சத்தில், சுவிட்சை ஆப் செய்து வைக்கவும்.
இடி அல்லது மின்னலின்போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு அகலுங்கள். இடி அல்லது மின்னலின்போது தஞ்சம் அடைய அருகில் எதுவும் இல்லாதபட்சத்தில் மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுங்கள்.
இடி அல்லது மின்னலின்போது டி.வி., மிக்ஸி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள். இடி அல்லது மின்னலின்போது திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்காதீர்கள்.
இடி அல்லது மின்னலின்போது வெட்ட வெளியில் நிற்காமல், உடனடியாக கான்கிரீட் கட்டடத்தில் தஞ்சம் அடைய வேண்டும்.குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சம் புகக் கூடாது. இடி அல்லது மின்னலின்போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் அரசும் மாவட்ட நிர்வாகம் கூறும் அனைத்து அறிவுரைகளையும் மக்கள் கடைப்பிடித்தால் மழை நேரங்களில் மின்சாரம் தாக்குதலில் உயிரிப்புகளை நிச்சயம் தடுத்து நிறுத்த முடியும்..மேலும் சமூகவலைதளங்களில் உலா வரும் போலிச் செய்திகளை உண்மை என நம்பமால், செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளை மட்டுமே மக்கள் நம்ப வேண்டும்..!